இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க ஆவணம் !!
1 min read

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க ஆவணம் !!

சமீபத்தில் வெளியான அமெரிக்க பாதுகாப்பு துறை ஆவணம் ஒன்றில் சீனாவை பற்றி இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது விரைவில் சீன கடற்படை ஆஃப்ரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள தனது ராணுவ தளத்தில் விமானந்தாங்கி கப்பல்கள், இதர பெரிய போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்த திட்டமிட்டு உள்ளதாகவும்

இதன் காரணமாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை நிரந்தரமாக தனது பார்வையை செலுத்த முடியும் எனவும் இந்த நடவடிக்கை இந்திய கடற்படைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இந்த தளத்தில் சீன மரைன் படையினர் தங்களது நிலநீர் கவச வாகனங்கள் மற்றும் பிரங்கிகளுடன் நிலை கொண்டிருப்பதாகவும் அதிகரித்தா வரும் சீன கடற்படையின் பலம் இந்திய பெருங்கடல் பகுதியில் அவர்கள் நுழைவதை சாத்தியமாக்கி உள்ளதாகவும் கூறுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க பசிஃபிக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் ஹேரி ஜூனியர் இனி இந்திய பெருங்கடல் பகுதியில் அவர்களின் நுழைவை தடுக்க எந்த தடையும் இல்லை என இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஜிபூட்டி சீன ராணவ தளத்தில் உள்ள சீன படையினர் பல முறை அமெரிக்க விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மீது தரை சார்ந்த லேசர் கருவிகள் மூலம் லேசர் கதிர்களை வீசி முடக்க முயற்சி செய்த நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.

இந்த ராணுவ தளம் மூலமாக சீன தரை கடல் வான் மார்க்கமாக இந்திய பெருங்கடல் பகுதியில் தனது இருப்பை உறுதி செய்ய முடியும் மேலும் இது உலகின் முக்கிய கடல் போக்குவரத்து பாதைக்கு அருகே இருப்பதால் கடல்சார் வணிகத்திலும் ஆதிக்கம் செலுத்த முனையும் என்பதில் சந்தேகமில்லை.