அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய சீன எல்லையோரம் கடந்த வாரம் இரு நாட்டு படைகள் இடையே நடைபெற்ற மோதல் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தலைநகரில் இது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
அதாவது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகள் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான், இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி, இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் கூட்டாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.
நடைபெற்ற மோதலில் சீன தரப்பு முள் தடிகள், கம்புகள், டேசர் (மின்சார) துப்பாக்கிகளை பயன்படுத்திய நிலையில் இந்திய படைகளும் முள் தடிகள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பகுதியில் உள்ள ஒரு ஆளில்லா மலை சிகரத்தை கைப்பற்ற சீன படையினர் முயற்சி செய்துள்ளனர் ஆனால் இந்திய படையினர் வெற்றிகரமாக அதை முறியடித்துள்ளனர்.
2016ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரை மூன்று முறை இந்த சிகரத்தை கைபற்ற சீன படைகள் முயற்சி செய்துள்ளனர், ஆனால் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளனர் கடந்த ஆண்டும் இதே போல 200 வீரர்களுடன் முயன்று சீனர்கள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.