மேலதிக S400 அமைப்புகளை வாங்கும் திட்டமில்லை இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • December 18, 2022
  • Comments Off on மேலதிக S400 அமைப்புகளை வாங்கும் திட்டமில்லை இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படை இந்த மாதம் தனது மூன்றாவது S-400 வான் பாதுகாப்பு படையணிக்கான அமைப்புகளை பெற்று கொள்ள உள்ளது மீதமுள்ள இரண்டு படையணிக்கான அமைப்புகளும் அடுத்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் ஐந்து S-400 வான் பாதுகாப்பு படையணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யாவுடன் செய்து கொண்டது.

அந்த நேரத்தில் இந்திய விமானப்படை மேலும் கூடுதலாக இரண்டு படையணிக்கான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அதனை கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த CAATSA தடை சட்டத்தின் மூலமாக இந்தியா மீது தடை நடவடிக்கைகள் தொடுக்கப்படலாம் என்பதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளும் சுட்டி காட்டப்படுகின்றன.

DRDO அதாவது நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏற்கனவே இரண்டு வெவ்வேறு விதமான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது, ERADS Extended Range Air Defence System தொலைவு நீட்டிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பின் அங்கமாக இவை இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த இரண்டு ஏவுகணைகளும் ERSAM மற்றும் XRSAM என அழைக்கப்படுகின்றன, இவை முறையே 150 கிலோமீட்டர் தூரம் மற்றும் 350 கிலோமீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.