
கோவாவில் இந்திய கடற்படையின் சிறப்பு படைகளான MARCOS மார்கோஸ் சிறப்பு படைகள் மற்றும் அமெரிக்க கடற்படையின் Navy SEALS ஆகியவை “சங்கம்” என அழைக்கப்படும் இருதரப்பு சிறப்பு படைகள் கூட்டு பயிற்சிகளை துவங்கி உள்ளன.
1997ஆம் ஆண்டு முதல்முறையாக சங்கம் கூட்டு பயிற்சிகள் நடைபெற்றன, இந்த ஆண்டு ஏழாவது முறையாக இந்த இருதரப்பு கூட்டு பயிற்சிகள் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது, இந்த கூட்டு பயிற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையேயான மிகவும் முக்கியமான பயிற்சியாகும்.
இந்த பயிற்சிகள் இருநாடுகளுக்கும் இடையேயான நட்பு மற்றும் நம்பிக்கையை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன. இந்த ஆண்டு நடைபெறும் பயிற்சியில் மும்பையில் உள்ள INS ABHIMANYU அபிமன்யு மார்க்கோஸ் தளத்தை சேர்ந்த வீரர்களும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் கொரனாடோ பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் சிறப்பு படை தளத்தை சேர்ந்த SEAL Team 5 ஐந்தாம் சீல் படையணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
மூன்று வாரங்கள் நடைபெற உள்ள இந்த பயிற்சிகளில் நேரடி தாக்குதல், ஹெலிகாப்டர் ஆபரேஷன்கள், பாராசூட் ஆபரேஷன்கள், கடலில் இடைமறித்து சோதனையிடுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்ட ஐந்தாவது சீல் SEAL படையணியானது கொரிய தீபகற்ப பகுதிக்கான சிறப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பானதாகும், இந்த படையணியின் வீரர்கள் ஆர்ட்டிக் (பனி) பாலைவனம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சண்டையிடுவதற்கான பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.