இந்தியாவுடன் இணைந்து கடல்சார் ட்ரோன்களை தயாரிக்க விரும்பும் ஜப்பான் !!

ஜப்பான் சீனாவின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் தனது பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்து முப்படைகளையும் வலுவாக்கவும் நவீனப்படுத்தவும் எண்ணி செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் தற்போது 5.5 ட்ரில்லியன் யென் அளவில் உள்ள பட்ஜெட்டை அடுத்த ஆண்டு சுமார் 6.5 ட்ரில்லியன் யென் அளவிற்கு அதிகரிக்கவும் இது முதல் ஐந்து வருட திட்டத்திற்கான 43 ட்ரில்லியன் யென் பணத்தில் அடங்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் கூடவே ஜப்பான் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகள் குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியாவுடன் இணைந்து செயலாற்றி சீனாவுக்கு செக் வைக்க விரும்புகிறது.

அந்த வகையில் சமீப காலங்களில் இந்தியா உடனான ஜப்பானுடைய பாதுகாப்பு உறவுகள் பன்மடங்கு வலுவடைந்து வருகின்றன, சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு கோபுரம் UNICORN Integrated mast அமைப்பை வாங்க இந்தியா ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

தற்போது ஜப்பான் இந்தியாவுடன் இணைந்து இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீன கடல் பகுதியில் பயன்படுத்தி கொள்ளும் வகையில் ஒரு கடல்சார் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை உருவாக்க விரும்புவதாக அறிவித்துள்ளது.

ஆனால் ஜப்பான் எந்த வகையான ஆளில்லா விமானத்தை இந்தியாவுடன் இணைந்து உருவாக்க விரும்புகிறது ( ஆயுதம் தாங்கிய அல்லது கண்காணிப்பு, அல்லது இரண்டும் சேர்ந்த) என்பது பற்றிய தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

ஏற்கனவே ஜப்பான் தற்காப்பு விமானப்படை அமெரிக்க Northrop Grumman RQ-4B Global Hawk ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி வரும் நிலையில் மேலும் அதிக அளவில் ட்ரோன்களில் முதலீடு செய்ய விரும்புவது குறிப்பிடத்தக்கது.