முதல்முறையாக காவல்துறை கமாண்டோக்களை பயிற்றுவிக்க உள்ள இந்திய தரைப்படை !!

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படிப்படியாக AFSPA – Armed Forces Special Powers Act எனப்படும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் விலக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய தரைப்படை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீனா உடனான எல்லையை பாதுகாக்கும் தேஸ்பூர் நகரை தளமாக கொண்ட இந்திய தரைப்படையின் 4 கோர் படைப்பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் டி எஸ் ராணா செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பல்வேறு இடங்களில் இருந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் விலக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது இனி இந்த அமைதியை காக்கும் பொறுப்பு மாநில காவல்துறை உடையதாகும் உள்நாட்டு பாதுகாப்பில் அவர்களின் பங்கு முக்கியமானது.

அந்த வகையில் மாநில காவல்துறையினரை தயார்படுத்தும் விதமாக சுமார் 3000 அசாம் காவல்துறை கமாண்டோ வீரர்களுக்கு ஒன்றேகால் வருடங்களுக்கு எட்டு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும் எனவும்

40 வாரங்கள் அடிப்படை ராணுவ பயிற்சி, 25 வாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு, சிறப்பு நடவடிக்கை ஆகியவை மற்றும் காவல்துறை சார்ந்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது இந்த பயிற்சி திட்டத்தை சீராக செயல்படுத்த ராணுவ பயிற்சியாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை சார்ந்த பயிற்சி அளிக்க காவல்துறை பயிற்சியாளர்கள் வரவழைக்கப்படுவர் என கூறினார்.