சீனா உடனான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவுகளில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க உதவும் ப்ரளய் PRALAY பலிஸ்டிக் ஏவுகணைகளை இந்திய ராணுவம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த திட்டம் தற்போதைய சூழ்நிலையில் ஒப்புதலுக்காக இந்திய ராணுவத்தால் முன்மொழியப்பட்டுள்ள நிகழ்வானது மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெற்றுள்ளது காரணம் இந்தியா ராக்கெட் படையை உருவாக்கும் பணிகளையும் தற்போது துவங்கி உள்ளதாகும்.
இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் பேசும்போது மறைந்து ஜெனரல் பிபின் ராவத் எதிரிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் வகையில் ராக்கெட் படையை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்து அதற்கு செயல்வடிவம் கொடுத்து வந்ததாகவும் கூறினார்.
இந்த ப்ரளய் திட எரிபொருள் ராக்கெட்டானது மிகவும் துல்லியத்தன்மை கொண்டதாகும் மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது, வானிலேயே தனது வழியை மாற்றி தன்னை அழிக்க வரும் ஏவுகணைகளை ஏமாற்றும் திறன் கொண்டதாகும்.
மேலும் இந்த ஏவுகணைகள் எதிரிகளின் கட்டுபாட்டு மையங்கள், ஆயுத கிடங்குகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற முக்கியமான இலக்குகளை அழிக்க உதவும் பிரம்மாஸ் ஏவுகணைகளுக்கு அடுத்தப்படியாக இந்திய படைகளின் முக்கிய ஏவுகணையாக இது விளங்கும் என்றால் மிகையாகாது.