மேலதிக 12 Su-30 MKI சுகோய் விமானங்கள் தயாரிக்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • December 2, 2022
  • Comments Off on மேலதிக 12 Su-30 MKI சுகோய் விமானங்கள் தயாரிக்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை !!

இந்திய விமானப்படையில் சுமார் 262 Sukhoi Su-30 MKI சு-30 பல திறன் கனரக போர் விமானங்கள் உள்ளன மட்டுமின்றி இவை இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக பார்க்கப்படுகின்றன, ஆனால் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய ஆயுதங்களை பயன்படுத்தி வரும் நாடுகள் ரஷ்யா மீதான தடைகள் காரணமாக அவற்றை பராமரிக்க முடியாமல் திணறி வருகின்றன.

ஆனால் இந்தியாவோ பல்வேறு ரஷ்ய ஆயுதங்களை தொழில்நுட்ப பரிமாற்ற உரிமம் பெற்று இந்தியாவிலேயே தயாரித்த வருகிறது அதில் மேற்குறிப்பிட்ட விமானங்களும் அடக்கம், நமது பொதுத்துறை நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது இந்திய விமானப்படைக்காக மேலும் 12 புதிய சுகோய்-30 போர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்காக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற இருந்த நிலையில் போர் காரணமாக தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை HAL நிறுவனம் ரஷ்யாவின் ROSBORONEXPORT ரோஸ்போரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, 10 விமானங்களில் தற்போதுள்ள விமானங்களுடன் ஒப்பிடுகையில் சிறு சிறு மேம்படுத்தல் பணிகள் செய்யப்படும் எனவும்,

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து சூப்பர் சுகோய் Super Sukhoi தரத்திற்கு Su-30 MKI போர் விமானங்களை தரம் உயர்த்த விரும்பும் நிலையில் அதற்கான அனுமதி பெற்று மீதமுள்ள இரண்டு போர் விமானங்களையும் அந்த தரம் உயர்த்தல் திட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சூப்பர் சுகோய் மேம்படுத்தல் திட்டத்தின் மூலமாக இந்திய சுகோய் விமானங்களில் பல்வேறு இடங்களில் முற்றிலும் புதிய பல அதிநவீன இந்திய அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இணைக்கப்படும் இதனால் எதிர்காலத்தில் நமது சுகோய் போர் விமானங்களை மேம்படுத்துவதில் ரஷ்ய பங்களிப்பு அல்லது தலையீடு இருக்காது ஆகவே நமக்கான சுதந்திரம் அதிகரிக்கும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.