கடலில் இறக்கப்பட்ட சுதேசி நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் !!

  • Tamil Defense
  • December 31, 2022
  • Comments Off on கடலில் இறக்கப்பட்ட சுதேசி நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் !!

சென்னை காட்டுபள்ளி Larsen and Toubro L & T கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்பட்ட முதலாவது ஆழம் குறைந்த பகுதிகளில் இயங்க கூடிய நீர்மூழ்கி எதிர்ப்பு கலன் கடலில் இறக்கப்பட்டது.

இந்த கலனுக்கு மஹாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள அர்னாலா எனும் தீவின் பெயரை இந்திய கடற்படை சூட்டியுள்ளது, இதை போல மேலும் ஏழு கலன்கள் கட்டமைக்கப்பட உள்ளன.

கடற்படை வழக்கப்படி ஒரு பெண் தான் கப்பல்களை கடலில் இறக்க வேண்டும் அந்த வகையில் அர்னாலா கலனை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி ஆலோசகர் திருமதி. ரசிகா சவ்பே டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற விழாவின் போது கடலில் இறக்கினார்.

இந்த வகை கலன்கள் ரோந்து, இடைமறிப்பு, சோதனை, தேடுதல் மற்றும் மீட்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகள், கண்ணிவெடி போர் முறை ஆகியவற்றை திறம்பட கையாளும் ஆற்றல் கொண்டவையாகும்.

இவை முறையே 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும், 900 டன்கள் எடையும் கொண்டவையாகும் அதிகபட்சமாக சுமார் 25 கடல்மைல் வேகத்தில் பயணிக்க முடியும் மேலும் சுமார் 1800 நாட்டிகல் மைல்கள் தொலைவுக்கு பயணிக்கும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை கலன்களின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றில் சுமார் 80 சதவிகித அமைப்புகள், தொழில்நுட்பங்கள், கருவிகள், உலோகம் ஆகியவை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு என்பதேயாகும்.