ஆயுதமேந்திய அமெரிக்க ஆளில்லா விமானங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டாத விமானப்படை மற்றும் தரைப்படை !!

அமெரிக்காவிடம் இருந்து சுமார் 3 பில்லியன் டாலர்கள் செலவில் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் வாங்கும் திட்டத்தில் இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை முழு ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

முப்படைகளுக்கும் தலா 10 வீதம் ஒட்டுமொத்தமாக 30 MQ – 9B Predator ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்ட நிலையில் இந்திய கடற்படை ஏற்கனவே இத்தகைய இரண்டு ஆளில்லா விமானங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறது.

இந்திய கடற்படை இவற்றின் செயல்பாட்டில் திருப்தி அடைந்துள்ள நிலையில் இந்திய தரைப்படை மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை தலா 100 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ட்ரோன்கள் மீது அதிருப்தியை மட்டுமே கொண்டுள்ளன ஆகவே மேலதிக இஸ்ரேலிய ஹெரோன் HERON TP ட்ரோன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த இஸ்ரேலிய ஹெரோன் ட்ரோன்கள் அமெரிக்க ப்ரடேட்டர் ட்ரோன்களுக்கு நிகரானவை என கூறப்பட்டாலும் அவற்றை விட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை குறைவானவை ஆகும், இந்திய தரைப்படை இந்த ஆண்டில் இத்தகைய 4 ட்ரோன்களை பெற்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய தரைப்படை மற்றும் விமானப்படை ஆகியவை மேற்குறிப்பிட்ட அமெரிக்க ட்ரோன்களை தயாரிக்கும் General Atomics Global Corporation நிறுவனத்திடம் இவற்றின் கொள்முதல் பராமரிப்பு செலவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் பற்றிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.