இந்தியா சொந்தமாகவே ஆறு பிரமாண்ட அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கி உள்ளது, தற்போது WDB Warship Design Bureau எனப்படும் போர்கப்பல் வடிவமைப்பு முகமை இந்த நீர்மூழ்கி கப்பல்களில் PumpJet Propulsion தொழில்நுட்பம் வேண்டும் என விரும்புகிறது, இந்திய கடற்படை மற்றும் WDB ஆகியவை இது சார்ந்த ஆய்வுகளுக்காக மேற்குறிப்பிட்ட சிறிய ரக அமைப்புகளை உருவாக்கி ஆராய்ந்து வருகின்றன.
இது மிக மிக முக்கியமான அதிநவீனமான தொழில்நுட்பம் ஆகும், இதனை தாமாகவே உள்நாட்டிலேயே தயாரிப்பது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றல்ல இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட திட்டத்தை உன்னிப்பாக கவனித்து வரும் ஃபிரான்ஸ் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.
அந்த வகையில் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் PumpJet Propulsion தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தருவதற்கு ஃபிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என பாதுகாப்பு துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை அதிநவீனமான அமைப்புகளாகும் குறைந்த சப்தத்தை வெளியிடும் அதே நேரத்தில் அதிக சக்தியை உற்பத்தி செய்து அதிவேகமாக நீர்மூழ்கி கப்பல் பயணிக்க உதவும் அமைப்பாகும், இவற்றை உருவாக்குவதில் உலோகவியல், இயந்திர பொறியியல், நீர் அறிவியல் போன்றவை மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன,
இந்த PumpJet Propulsion அமைப்புகள் காரணமாக அவை பொருத்தப்பட்டுள்ள கப்பல்கள் எதிரி கண்காணிப்பில் சிக்குவதற்கான வாய்புகள் மிகவும் குறையும், இங்கிலாந்தின் Astute அஸ்ட்யுட், ஃபிரான்ஸின் Barracuda பேரக்கூடா மற்றும் இனி வர உள்ள அமெரிக்காவின் Columbia கொலம்பியா ரக அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களில் இந்த அமைப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மேற்குறிப்பிட்ட அமைப்பின் பிரமாண்ட அளவு மற்றும் அதிக திறன் அல்லது சக்தி தேவை காரணமாக சிறிய டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்த முடியாது ஆனால் அணுசக்தியால் இயங்கும் மிகப்பெரிய அளவிலான நீர்மூழ்கி கப்பல்களில் மட்டுமே இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.