நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய சீன படைகள் மோதிய சம்பவம் கடுமையாக எதிரொலித்துள்ள நிலையில் பிரதான எதிர் கட்சியான காங்கிரஸ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
மாநிலங்களில் அவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் சயத் நசீர் ஆகியோர் உடனடியாக மற்ற அவை விவாதங்களை நிறுத்திவிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பான இந்த மோதல் விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் எனவும் கடந்த ஏப்ரல் 2020 முதல் இன்று வரையிலான எல்லை நிலவரம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும்
பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேசத்திற்கு நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்தான தகவல்களை அறிவிக்க வேண்டும் எனவும் தங்களது நோட்டீஸில் கூறியுள்ளனர்.
அதே போல் மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி கொடுத்த நோட்டீஸில் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மோதல் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும் எனவும் இது இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரம் தொடர்பானது எனவும் கூறியுள்ளார்.
ரஜ்னி பாட்டில், ரஞ்சித் ரஞ்சன், ஷக்திசின்ஹ் கோலி, ஜெபி மாத்தேர் போன்ற பிற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே போன்ற நோட்டீஸ்களை தங்களது அவையில் கொடுத்து அரசிடம் உடனடியாக விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.