மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல் !!

  • Tamil Defense
  • December 7, 2022
  • Comments Off on மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்த சீன கண்காணிப்பு கப்பல் !!

இந்த மாதம் இந்தியா அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு செல்லும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்த உள்ள நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மீண்டும் சீன கண்காணிப்பு கப்பல் நுழைந்துள்ளது.

சீன கண்காணிப்பு கப்பலான Yuan Wang 5 யுவான் வாங் 5 இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளதை அடுத்து இந்திய கடற்படை அந்த கப்பலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாட்டு அரசுகளும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையோ அல்லது கருத்தையோ வெளியிடாத நிலையில் இந்தியா ஏவுகணை சோதனையை நடத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சீன கண்காணிப்பு கப்பல் யுவான் வாங் 5 இந்தோனேசியாவில் உள்ள சுந்தா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளதாக ட்விட்டரில் பாதுகாப்பு நிபுணர் டேமியன் சைமன் பதிவிட்டுள்ளார்.

இப்படி இந்திய பெருங்கடல் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீன நடவடிக்கை காரணமாக இந்தியா இந்தோ பசிஃபிக் பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயலாற்றுவதும் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.