இந்திய தயாரிப்பு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை குவிக்கும் அர்மீனியா !!

ரஷ்யாவிடம் இருந்து தொழில்நுட்ப பரிமாற்ற உரிமை பெற்று அதன் அடிப்படையில் இந்தியாவிலேயே BDL Bharat Dynamics Limited பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் Konkurs-M ATGM Anti Tank Guide Missile எனப்படும் வழிகாட்டப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் தயாரிக்கப்படும் இந்த டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை அர்மீனியா தனது ஆயுத கையிருப்பை அதிகரிக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை போலவே அர்மீனியாவும் பல்வேறு சோவியத் காலகட்ட அல்லது சோவியத் தயாரிப்பு ஆயுதங்களை மிகப்பெரிய அளவில் பயன்படுத்தி வரும் நிலையில் அத்தகைய ஆயுதங்களை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரித்து வரும் இந்தியாவிடம் இருந்தும் அந்த ஆயுதங்களை வாங்கி வருகிறது.

Konkurs M ஒரு இரண்டாம் தலைமுறை ஆயுதமாகும் மேலும் இது Konkurs AT-5 Spandrel டாங்கி எதிர்ப்பு ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும் இதை கொண்டு டாங்கிகள், கவச வாகனங்கள், தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்கள் போன்றவற்றை தாக்கி அழிக்க முடியும், இந்தியா இத்தகைய 15,000 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.