இந்தியாவின் பங்களிப்பை தனது புதிய கனரக ஹெலிகாப்டர் திட்டத்தில் எதிர்பார்க்கும் அமெரிக்கா !!
1 min read

இந்தியாவின் பங்களிப்பை தனது புதிய கனரக ஹெலிகாப்டர் திட்டத்தில் எதிர்பார்க்கும் அமெரிக்கா !!

அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர் தான் CH-47 Chinook ஆகும், இது கடந்த 1961 ஆம் ஆண்டு முதல்முறையாக பறக்க துவங்கியது பின்னர் உலகளாவிய புகழை பெற்றது, பல போர்களில் ராணுவ போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 1500 CH-47 Chinook கனரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, பல நாடுகளின் விமானப்படையில் ஹெலிகாப்டர் போக்குவரத்து பிரிவின் முதுகெலும்பாக விளங்கி வருகின்றன, இந்திய விமானப்படையிலும் இவற்றின் சேவை அளப்பரியதாகும்.

இந்த வகை ஹெலிகாப்டர்கள் எப்படியும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சேவையில் இருக்கும் என்றாலும் அமெரிக்க ராணுவம் இவற்றை இனி வாங்குவதை நிறுத்தி கொள்ளவும் பதிலாக இவற்றிற்கான மாற்றாக ஒரு புதிய கனரக ஹெலிகாப்டரை உருவாக்கி அவற்றை படையில் இணைக்க விரும்புகிறது.

இந்த திட்டத்தில் முக்கிய நட்பு நாடுகளான இந்தியா இங்கிலாந்து ஜப்பான் போன்ற நாடுகளை சேர்த்து கொள்ளவும் அமெரிக்கா விரும்புகிறது, அடுத்த ஆண்டு இதுசார்ந்த பேச்சுவார்த்தைகள் துவங்கும், 2030ஆம் ஆண்டு வாக்கில் இந்த திட்டம் தயாரிப்பு நிலையை எட்டும் எனவும் பரவலாக கூறப்படுகிறது.

அமெரிக்க ராணுவம் இந்த புதிய அதிநவீன கனரக ஹெலிகாப்டர்கள் அதிக வேகத்தில் நீண்ட தூரம் அதிக எடையை சுமந்து கொண்டு பறக்க வேண்டும் எனவும் எந்தவித நிலையையும் சமாளிக்கும் திறனுடன் இருக்க வேண்டும் எனவும் FARA, FLRAA எனப்படும் எதிர்கால தாக்குதல் மற்றும் வீரர்கள் போக்குவரத்து ஹெலிகாப்டர்களுக்கு ஈடு கொடுக்க வேண்டும் என விரும்புவதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.