4ஆவது இந்திய ஃபிரான்ஸ் வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தை !!

சமீபத்தில் இந்தியா ஃபிரான்ஸ் இடையேயான நான்காவது வருடாந்திர பாதுகாப்பு பேச்சுவார்த்தை தலைநகர் தில்லியில் நடைபெற்றது, இதில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஃபிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லிகார்னு ஆகியோர் தலைமை வகித்தனர், இதில் இந்திய முப்படை தலைமை தளபதி, தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன, குறிப்பாக இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இணைந்து செயலாற்றுவது ஆகியவை உள்ளடங்கும்.

இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் இந்தியாவின் சுதேசி ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA ஆம்காவிற்கு ஒரு 110 – 130 KN கிலோ நியூட்டன் திறன் வெளிபடுத்தும் ஜெட் என்ஜினை கூட்டாக தயாரிப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாகும்.

மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நமது GTRE மற்றும் DRDO ஆகிய அமைப்புகளிடம் தகுதிவாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யவும் அப்போது தான் இந்த திட்டத்திற்கு பாதுகாப்பு கொள்முதலுக்கான கமிட்டியின் அனுமதி 2023 இறுதி அல்லது 2024 துவக்கத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே ஃபிரான்ஸ் நாட்டின் SAFRAN சஃப்ரான், இங்கிலாந்தின் ROLLS ROYCE ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் அமெரிக்காவின் General Electrics ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ் ஆகியவை இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.