துருக்கி பாகிஸ்தான் அஸர்பெய்ஜான் Vs இந்தியா ஈரான் அர்மீனியா !!

துருக்கி பாகிஸ்தான் மற்றும் அஸர்பெய்ஜான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு இந்தியா ஈரான் மற்றும் அர்மீனியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது என்றால் மிகையல்ல.

துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்கனவே நல்ல உறவுகள் நீடித்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் அஸர்பெய்ஜான் உடன் நல்ல உறவு இருந்தது தற்போது மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, இந்த நெருக்கம் காரணமாக இந்தியா ஈரான் மற்றும் அர்மீனியா இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளது.

இந்தியா ஈரான் அர்மீனியா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு மற்றும் ராணுவ சிந்தனையாளர்கள் பல்வேறு இடங்களில் மிகவும் ஆழமான செயல்பாடுகளில் ஒன்றாக ஈடுபாடு காட்டி வருகின்றனர் சமீபத்தில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியில் அர்மீனிய பாதுகாப்பு அமைச்சர் சுரேன் பாப்பிகான் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்தியா அர்மீனியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை சப்ளை செய்து வருகிறது கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் அர்மீனியா இடையே 40 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றும் இந்த ஆண்டு 245 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 155 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் மூலமாக SWATHI WLR Weapon Locating Radar எனப்படும் ஆயுதங்களை கண்டறியும் ரேடார், Pinaka MBRL பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள், MArG Mountain Artillery Gun எனப்படும் மலையக பிரங்கிகள் ஆகியவற்றை இந்தியா அர்மீனியாவுக்கு ஏற்றுமதி செய்தும் செய்யவும் உள்ளது.

2020, 2022 ஆகிய ஆண்டுகளில் அஸர்பெய்ஜான் மற்றும் அர்மீனியா இடையே நடைபெற்ற போர்களின் போது துருக்கி அஸர்பெய்ஜானுக்கு வழங்கிய ஆயுதங்கள் குறிப்பாக ஆளில்லா விமானங்கள் அஸர்பெய்ஜானுக்கு பெரும் உதவியாக அமைந்தன, சமீபத்தில் கூட சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தம் ஒன்றை துருக்கி அஸர்பெய்ஜானுடன் செய்து கொண்டுள்ளது.

அஸர்பெய்ஜான் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு சர்வதேச அரங்கில் தீவிர ஆதரவு அளித்து வருகிறது குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை மிகவும் தீவிரமாக ஆதரித்து வருகிறது இது தவிர இரு நாடுகளுக்கும் நல்ல ராணுவ உறவுகளும் உள்ளன.

அதாவது இரு நாடுகளும் ராணுவ தளவாடங்களை கூட்டாக தயாரிப்பது, பாகிஸ்தானிடம் இருந்து பாகிஸ்தான்-சீன கூட்டு தயாரிப்பான JF-17 போர் விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகள், அஸர்பெய்ஜான் ராணுவத்திற்கு பாகிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிப்பது போன்றவை நடந்தேறி வருகின்றன.

அதே போல இந்தியா ஈரான் இடையே நல்ல உறவுகள் உள்ள நிலையில் அர்மீனியா முன்றாவதாக இணைய விரும்புகிறது இதை தொடர்ந்து ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தை அர்மீனியா வழியாக ஐரோப்பிய ஆசிய எல்லை பகுதிகள் மற்றும் ஃபின்லாந்து வரை இணைக்க திட்டமிட்டு உள்ளனர், இதிற்கு சர்வதேச வடக்கு தெற்கு பொருளாதார வழித்தடம் INSTC International North South Transport Corridor என பெயரிட்டுள்ளனர்.

இது நிறைவேறும் பட்சத்தில் சாபஹார் இந்த பிராந்தியத்தின் மிக முக்கியமான மற்றும் பிசியான துறைமுகங்களில் ஒன்றாக மாறும் குறிப்பாக அர்மீனியாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் பலமாக அமையும் மேலும் அர்மீனியாவுக்கும் கடல்வழி வாணிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது இதன் சிறப்பாகும், இதன் காரணமாக காகசஸ் பிராந்தியத்தில் இந்தியா நிலையாக காலுன்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.