ரஷ்ய அரசு புதன்கிழமை அன்று தனது படைகள் கைபற்றிய மிக முக்கியமான உக்ரைனிய நகரமான கெர்சோனில் இருந்து படைகளை பின்வாங்குமாறு உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி உக்ரைன் போர் நடவடிக்கையை நடத்தி வரும் ரஷ்ய தளபதியான ஜெனரல் செர்கேய் சுரோவிகின் பேசும்போது கெர்சோன் நகரில் உள்ள ரஷ்ய சப்ளைகளை கொண்டு சேர்ப்பது கடினமான காரியம் ஆகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் உக்ரைனை இரண்டாக பிரிக்கும் டினிப்ரோ ஆற்றை கடந்து கெர்சோனில் உள்ள ரஷ்ய படைகள் வருவதற்கான ஆயத்த பணிகளை செய்து வருவதாகவும் பின்னர் ஆற்றின் மறுகரையில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் நிலைகொண்டு சண்டையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு ஒரு புறம் ராணுவ நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் வரவேற்றாலும் தீவிர தேசியவாத எண்ணம் கொண்ட தீவிர வலதுசாரிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
உக்ரைன் தரப்பு ரஷ்யாவின் இந்த முடிவை நம்பவில்லை ஆகவே உக்ரைனிய படைகள் மிகவும் கவனமாக தான் கெர்சோன் நகரத்திற்குள் நுழையும் என நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.