
இன்று காலை போலந்து நாட்டின் கிழக்கு பகுதியில் ஒரு ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் இரண்டு பேர் இறந்ததனர், இந்த செய்தி வெளியானதும் ரஷ்யா மற்றும் நேட்டோ இடையேயான போர் பதட்டம் உச்சத்தை தொட்டது, இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில் இந்த செய்தி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரணம் நேட்டோ நாடுகள் தாக்கப்பட்டால் நேட்டோ சட்டத்தின் ஐந்தாவது ஷரத்தின்படி அந்நாடு எதிரி நாடு மீது போர் தெடுக்க ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளுக்கும் அழைப்பு விடுக்க முடியும் அப்படி அழைப்பு விடுக்கப்பட்டால் அனைத்து நேட்டோ நாடுகளும் அதனை ஏற்று கொண்டு உடனடியாக தாக்குதல் நடத்திய நாடு மீது போர் பிரகடனம் செய்ய வேண்டும் இது மூன்றாவது உலக போருக்கு கூட வித்திடலாம்.

இதன் காரணமாக பெரும் பதட்டம் நிலவிய நிலையில் முதற்கட்ட விசாரணைகளின் போது உக்ரைனிய படைகள் ரஷ்யா உக்ரைன் மீது ஏவிய ஏவுகணைகளை இடைமறிக்க ஏவிய வான் பாதுகாப்பு ஏவுகணை ஒன்று தான் வழிமாறி போலந்து நாட்டில் விழந்து வெடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது, ரஷ்யாவும் போலந்து மீதான தாக்குதல் பற்றிய குற்றச்சாட்டை மறுத்து வந்தது.
அதே போல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களும் ஜி-20 மாநாட்டில் அவசர ஆலோசனை கூட்டத்தில் பேசிய போது மேற்குறிப்பிட்ட ஏவுகணை ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனினும் விசாரணை முடிவு வரை காத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இப்படியான நிலையில் லித்துவேனிய அதிபர் நேட்டோ அமைப்பின் ஒவ்வொரு அடியையும் பாதுகாக்க வேண்டும் எனவும், ஹங்கேரி நேட்டோ சட்டத்தின் நான்காவது ஷரத்தின்படி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர், அதன்படி நேட்டோ ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது, போலந்து மற்றும் அமெரிக்க அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இதற்கிடையை என்ன நடைபெற்றது என்றே தெரியாமல் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி ரஷ்யா நேட்டோ அமைப்பை தாக்கி விட்டதாகவும் அத்துமீறி செயல்படுவதாகவும் இதற்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் எனவும் காட்டமான அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.