தென்கொரியாவை நோக்கி ஏறத்தாழ 200 போர் விமானங்களை அனுப்பிய வடகொரியா பதட்டம் அதிகரிப்பு !!

  • Tamil Defense
  • November 5, 2022
  • Comments Off on தென்கொரியாவை நோக்கி ஏறத்தாழ 200 போர் விமானங்களை அனுப்பிய வடகொரியா பதட்டம் அதிகரிப்பு !!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வடகொரிய விமானப்படைக்கு சொந்தமான ஏறத்தாழ 200 போர் விமானங்கள் தென் கொரியா உடனான எல்லைக்கு மிக அருகே பறந்து தென்கொரியாவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தென்கொரிய விமானப்படையும் ஏறத்தாழ சுமார் 100 போர் விமானங்களை பதிலுக்கு எல்லையோரம் அனுப்பி வைத்துள்ளது இவற்றில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட F-35 ஸ்டெல்த் போர் விமானங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இத்தகைய ஆக்ரோஷமான நடவடிக்கைகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் ராணுவ பயிற்சிகள் தென்கொரியா தங்களை மீண்டும் மீண்டும் சீண்டுவதாலேயே நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகபடுத்த உறுதி பூண்ட நிலையில் தற்போது மிகப்பெரிய ராணுவ கூட்டுபயிற்சி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vigilant Storm விஜிலன்ட் ஸ்டார்ம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் F-35 ஸ்டெல்த் போர் விமானங்கள் உட்பட சுமார் 240 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்படும் என கூறப்படுகிறது இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் மிகப்பெரிய அளவில் போர் அச்சம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.