
ஐக்கிய நாடுகள் பொது சபையில் பாலஸ்தீனியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான், மொராக்கோ உள்ளிட்ட 19 நாடுகளால் முன்மொழியபட்டு எகிப்தால் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் ஒன்றின் மீது ஒட்டெடுப்பு நடைபெற்றது.
மேற்குறிப்பிட்ட தீர்மானம் இஸ்ரேலையும் அதன் அணு ஆயுத கையிருப்பையும் குறிவைத்து தாக்கல் செய்யப்பட்டதாகும் இந்த நிலையில் ஒட்டெடுப்பில் இஸ்ரேல், மைக்ரோனேசியா, கனடா, பலாவு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்த நிலையில் 24 நாடுகள் வாக்களிக்கவில்லை, 152 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
ஆகவே “அணு ஆயுதம் இல்லா மத்திய கிழக்கு பகுதி” என்ற இந்த தீர்மானம் நிறைவேறியதால் ஐக்கிய நாடுகள் பொது சபை இஸ்ரேல் தனது ஆயுதங்களை ஒழித்துவிட்டு பின்னர் அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டத்தில் கையெழுத்திட்டு அதன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அணு ஆராய்ச்சி சார் மையங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் பார்வைக்கு திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
அணு ஆயுதம் இல்லாத மத்திய கிழக்கு பகுதி எனும் நோக்கம் கொண்ட இந்த தீர்மானத்தில் இஸ்ரேல் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே பகுதியில் அணு ஆயுதம் தயாரிக்க தீவிரமாக முயன்று வரும் ஈரானை பற்றி இந்த தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடபடவில்லை எனவும் இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது.
உலகில் வெறும் ஒன்பது நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதம் உள்ள நிலையில் அவற்றில் இஸ்ரேலும் ஒன்று ஆனால் இஸ்ரேல் இன்று வரை தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதாகவோ அவற்றின் எண்ணிக்கை பற்றியோ எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.