டாடா குழுமத்தின் கவச வாகனத்திற்கு மூன்று இந்திய நிறுவனங்களிடம் இருந்து போட்டி !!

  • Tamil Defense
  • November 2, 2022
  • Comments Off on டாடா குழுமத்தின் கவச வாகனத்திற்கு மூன்று இந்திய நிறுவனங்களிடம் இருந்து போட்டி !!

DRDO – Defence Research & Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைக்கப்பட்டு TATA குழுமத்தால் தயாரிக்கப்பட்டு இந்திய தரைப்படையில் இணைந்த கவச வாகனம் தான் WhAP – Wheeled Armoured Platform ஆகும்.

தற்போது இந்த வாகனத்திற்கு போட்டியாக மூன்று இந்திய தனியார் துறை நிறுவனங்களான Mahindra Defence மஹிந்திரா டிஃபன்ஸ், Larsen & Toubro லார்சன் அன்ட் டூப்ரோ மற்றும் Kalyani கல்யாணி ஆகியவை கவச வாகனங்களை தயாரிக்க உள்ளன, அதற்கான மாதிரிகளை பாதுகாப்பு கண்காட்சியிலும் காட்சிபடுத்தியுள்ளனர்.

லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் தான் தயாரிக்க உள்ள 8×8 கவச வாகனத்தின் மாதிரியை காட்சிபடுத்தியுள்ள நிலையில் அதன் சோதனை வாகனம் 2023ஆம் ஆண்டு வெளிவந்து சோதனைகளில் ஈடுபடும் எனவும் இதில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்ப அமைப்புகள் DRDO தயாரிப்பு எனவும் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் அவற்றை பெற்று பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதே போல் மஹிந்திரா குழுமத்தின் மஹிந்திரா டிஃபன்ஸ் நிறுவனமும் ஒரு 8×8 கவச வாகனம் மற்றும் இலகுரக டாங்கி மாதிரிகளை காட்சிபடுத்தியுள்ளது, ஆனால் இந்த திட்டத்தின் காலக்கெடு மற்றும் சக தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் எதையும் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

கடைசியாக Kalyani கல்யாணி குழுமம் சிங்கப்பூர் நாட்டின் ST Engineering மற்றும் அயர்லாந்து நாட்டின் Timoney Technology ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த Terrex 8×8 கவச வாகனத்தை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் இந்தியாவில் தயாரித்து இந்திய தரைப்படைக்கு வழங்க திட்டமிட்டு உள்ளது, ஏற்கனவே இந்த நிறுவனம் தென்னாஃப்ரிக்காவின் PARAMOUNT GROUP தயாரிக்கும் M4 4×4 கவச வாகனங்களை தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரித்து இந்திய தரைப்படை அவற்றை இணைத்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.

இந்திய தரைப்படை பல்வேறு வகையான கவச வாகனங்களை படையில் இணைக்க விரும்புவதால் இந்த மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களும் மிகவும் கடுமையாக போட்டி போட்டு மிகப்பெரிய அளவில் ஒப்பந்தம் பெற்றுவிட துடித்து வருவதும், இவை அனைத்துமே டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், 30mm துப்பாக்கி மற்றும் 7.62mm துப்பாக்கி போன்றவற்றை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.