பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயார்- ராணுவ தளபதி !!

சமீபத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஶ்ரீநகரில் நடைபெற்ற ஷவுர்ய தின விழாவின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்படும் எனவும் அப்போது தான் மிஷன் காஷ்மீர் நிறைவேறும் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் இந்திய தரைப்படையின் முக்கிய படைப்பிரிவான 15 CORPS எனப்படும் CHINAR CORPS சினார் கோர் படைப்பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் அஹூஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர் அரசு முடிவு செய்து உத்தரவு பிறப்பித்தால் அதனை நிறைவேற்ற இந்திய தரைப்படை முழு அளவில் தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

நமது திறன்களை அதிகரித்து வரும் நேரத்தில் நவீனமயமாக்கல் திட்டங்களும் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கடந்த 75 ஆண்டுகளில் இந்திய தரைப்படை திறன்கள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்லையோர நிலவரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் தற்போது எல்லையோர நிலவரம் சீராக உள்ளதாகவும் ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊடுருவல் முயற்சிகள் நடப்பதாகவும் அவற்றை தடுக்க இந்திய தரைப்படை முழு தயார் நிலையில் உள்ளதாகவும் கடந்த 32 ஆண்டுகளில் இந்த ஆண்டில் தான் குறைவான ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறினார்.

370ஆவது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகான சூழல் குறித்து கேட்கப்பட்டபோது முன்பிருந்த நிலையை விடவும் தற்போது நிலைமை முன்னேறி உள்ளதாகவும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் பயங்கரவாத செயல்களுக்கான ஆதரவு பெருமளவில் குறைந்து வருவதாகவும், பயங்கரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேர்வது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.