ஐந்து உள்நாட்டு ராணுவ தயாரிப்பு திட்டங்களுக்கு அனுமதி அளித்த இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on ஐந்து உள்நாட்டு ராணுவ தயாரிப்பு திட்டங்களுக்கு அனுமதி அளித்த இந்திய தரைப்படை !!

இந்திய தரைப்படை இந்திய அரசின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஐந்து வெவ்வேறு வகையான ராணுவ தயாரிப்பு திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

Make 2 என அறியப்படும் இந்த திட்டத்தின் கீழ் HFSDR, Kill System, IWTS, TGM மற்றும் MRPKS ஆகிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, முதல்கட்டமாக ஐந்து அமைப்புகளின் சோதனை வடிவ கருவிகள் தயாரிக்கப்படும் பின்னர் வெற்றி அடைந்தால் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உதவியோடு மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்படும், இனி அவற்றை பற்றி விரிவாக காணலாம்.

1) HFSDR – High Frequency Man Packed Software Defined Radio: இந்த அமைப்புகள் அதிக பாதுகாப்புடன் கூடிய தொலைதூர தகவல் தொடர்பு திறனை அளிக்கும், தற்போதுள்ள அரதப்பழைய காலாவதியாகி போன HF ரேடியோ செட்களை மாற்ற உதவும், வெற்றி அடைந்தால் முதல்கட்டமாக 300 HFSDR
கருவிகள் வாங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன, சோதனை வடிவத்தை தயாரிக்க 14 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2) Kill System : தற்போதைய உலகில் ராணுவ போர் முறைகளில் ஆளில்லா விமானங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன, நாள் தோறும் இவற்றால் மிகப்பெரிய ஆபத்து உருவாகி வருவதால் இவற்றை எதிர்க்கும் தொழில்நுட்பங்களும் அதிகளவில் தேவைப்படுகின்றன, ஆகவே ஆளில்லா விமானங்களை தாக்கி வீழ்த்தும் அமைப்புகளை 18 நிறுவனங்கள் உருவாக்க உள்ளனர், வெற்றி அடைந்தால் 35 அமைப்புகளை கொள்முதல் செய்ய உள்ளனர்.

3) IWTS – Indigenous Weapon Training Simulator : இந்த அமைப்புகள் மூலமாக இளம் வீரர்களுக்கு உண்மையான போர் களம் போன்ற செயற்கை சூழல்களில் கிராஃபிக்ஸ் உதவியோடு பயிற்சி அளிக்க முடியும், இவற்றின் காரணமாக துப்பாக்கி தோட்டா பயன்பாடு இல்லாமல் போகும் அதனால் செலவு குறையும் மேலும் காலநிலை காரணமாக தற்போது பயிற்சி மையங்களை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் இல்லாமல் போகும், ஒரே நேரத்தில் 10 வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் நான்கு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் ஈடுபட உள்ளனர் வெற்றி அடைந்தால் 125 அமைப்புகள் வாங்கப்படும்.

4) TGM – Terminally Guided Munitions : இவை அதிநவீன துல்லிய தாக்குதல் குண்டுகளாகும் இவற்றை பிரங்கிகளில் இருந்து எதிரி இலக்குகளை மிக மிக துல்லியமாக தாக்குவதற்கு பயன்படுத்தி கொள்ள முடியும், தற்போது இந்திய தரைப்படை ஆறு நிறுவனங்களுக்கு 155 மில்லிமீட்டர் அளவிலான துல்லிய தாக்குதல் குண்டுகளை தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது, சோதனையில் இவை வெற்றி அடைந்தால் இந்திய தரைப்படை முதல்கட்டமாக இத்தகைய 155 மில்லிமீட்டர் அளவிலான சுமார் 2000 துல்லிய தாக்குதல் குண்டுகளை வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5) MRPKS – Medium Range Precision Kill Systems: இவை Loitering Munition வகையை சேர்ந்த இடைத்தூர துல்லிய தாக்குதல் மிதவை குண்டுகளாகும், சுமார் இரண்டு மணிநேரம் தொடர்ந்து பறந்து 40 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும், இவற்றின் சோதனை வடிவங்களை தயாரிக்க 15 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன வெற்றி அடைந்தால் இத்தகைய 10 இடைத்தூர துல்லிய தாக்குதல் மிதவை குண்டுகள் வாங்கப்படும்.

தற்போது Make-2 திட்டத்தின் கீழ் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 43 வெவ்வேறு தயாரிப்பு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன அவற்றில் 66% அதாவது 22 திட்டங்கள் சோதனை வடிவ நிலையில் உள்ளன இவற்றின் மதிப்பு 18,000 கோடியாகும், 16 திட்டங்கள் ஆர்வமுள்ள நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மேற்கொண்டவை என்பது கூடுதல் தகவலாகும்.