இந்தியா ஃபிரான்ஸ் இடையேயான 7ஆவது கருடா விமானப்படை கூட்டு பயிற்சிகள் !!

அக்டோபர் 26 துவங்கி நவம்பர் 12 வரை இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையேயான ஏழாவது இருதரப்பு கருடா விமானப்படை கூட்டுபயிற்சிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படை சார்பில் ப்ரச்சந்த் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர், ரஃபேல் Dassault Rafale, ஜாகுவார் Sepecat Jaguar, தேஜாஸ் Tejas, சு-30 Su – 30 MKI, AWACS, AEWCS, டேங்கர் விமானங்கள், மி-17 Mi-17 V5 போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் ஆகியவை பங்கேற்கின்றன.

அதே போல் ஃபிரெஞ்சு விமானப்படையின் சார்பில் 220 வீரர்கள், நான்கு Dassault Rafale போர் விமானங்கள், ஒரு Airbus A330 MRTT போக்குவரத்து டேங்கர் விமானம் ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கருடா இருதரப்பு விமானப்படை கூட்டு பயிற்சிகளின் மூலமாக இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகப்படுத்தப்படும், இரு நாடுகளின் ஒருங்கிணைப்பு அதிகமாகும் என இருநாட்டு விமானப்படை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதுவரை 6 முறை இப்பயிற்சி நடைபெற்றுள்ளது, அதில் முதல்முறை, இரண்டாம் முறை மற்றும் ஆறாவது முறை 2006,2012, 2014 ஆகிய ஆண்டுகளில் முறையே குவாலியர், கலைகுண்டா மற்றும் ஜோத்பூர் ஆகிய தளங்களில் நடைபெற்றுள்ளது, இந்த ஆண்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இரண்டாவது, நான்காவது மற்றும் ஆறாவது முறை இந்த பயிற்சிகள் முறையே 2005, 2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இந்த பயிற்சிகள் ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது கூடுதல் தகவல் ஆகும்.