தனது திறன்களை அதிகரிக்கும் விதமாக இந்திய விமானப்படை தன்னுடைய பல ஆண்டுகள் பழமையான AFNet – Air Force Network எனப்படும் விமானப்படை நெட்வொர்க்கை மேம்படுத்தும் திட்டத்தை துவங்கி உள்ளது, இந்த அமைப்பு தான் இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான முதுகெலும்பாகும்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான இந்த அமைப்பானது உடனடியான தகவல் தொடர்பு வசதிக்காக தனது தரை வான் மற்றும் விண் சார்ந்த அனைத்து தகவல் தொடர்பு அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது, மேலும் இந்த அமைப்பு செயற்கைகோள்கள் மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.
இதனுடைய மேம்படுத்தல் திட்டத்தின்படி பழைய மென்பொருட்கள் மற்றும் கருவிகள் மாற்றப்படும் இது தவிர பழைய கட்டுபாட்டு மையங்கள் நவீனமயமாக்கப்படும், புதிய மையங்களும் அமைக்கப்படும் என இந்திய விமானப்படை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நவீனமயமாக்கல் மற்றும் மேம்படுத்தல் திட்டமானது நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் எனவும் வருகிற 2024ஆம் ஆண்டு வாக்கில் திட்டம் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.