
ஜப்பான் தனது ராணுவ தயாரிப்பு துறையை வெளி உலகிற்கு திறந்து விட துவங்கிய நிலையில் இந்தியா ஜப்பானிடம் இருந்து கடற்படை கப்பல்களுக்கான Unicorn எனப்படும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு கோபுரம் ஒன்றை வாங்க உள்ளது இதை தவிர பல்வேறு ஜப்பானிய தொழில்நுட்பங்களில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.
அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த டிசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள் வரிசையில் ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன, இவற்றிற்காக ஜப்பான் உருவாக்கிய சில தொழில்நுட்பங்களை பெறுவதில் இந்தியா ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா அடுத்தகட்டமாக முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கட்டமைக்க உள்ள 12 சுதேசி டிசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களுக்காக ஜப்பானிடம் இருந்து அவர்களின் நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தி வரப்படும் உலோகங்கள், பேட்டரி மேலாண்மை அமைப்பு – Battery Management System மற்றும் இதர சில தொழில்நுட்பங்களை பெற விரும்புகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியா ஜப்பானிடம் இருந்து அவர்களுடைய சோர்யூ SORYU ரக டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க விரும்பிய நிலையில் ஜப்பான் தயக்கம் காட்டியதால் பின்னர் இந்திய கடற்படை ஃபிரான்ஸின் Scorpene ரக நீர்மூழ்கி கப்பல்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.