மலபார்-2022 கூட்டுபயிற்சி க்வாட் நாடுகளின் கடற்படை தளபதிகள் ஜப்பானில் ஆலோசனை !!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on மலபார்-2022 கூட்டுபயிற்சி க்வாட் நாடுகளின் கடற்படை தளபதிகள் ஜப்பானில் ஆலோசனை !!

இந்த ஆண்டுகக்கான மலபார்-2022 கடற்படை கூட்டு பயிற்சிகளை முன்னிட்டு அதனை நடத்துவது தொடர்பாக க்வாட் QUAD நாடுகளின் கடற்படை தளபதிகள் ஜப்பானில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.

நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வருங்கால மலபார் கூட்டு பயிற்சிகளில் கூட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பாக கருத்துக்களை தளபதிகள் பரிமாறி கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்றது, இதில் இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கலந்து கொண்டார், அவருடன் ஆஸ்திரேலிய கடற்படை தலைமை தளபதி வைஸ் அட்மிரல் மார்க் ஹாம்மண்ட், ஜப்பான் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் சகாய் ரியோ மற்றும் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கை பிரிவு தலைவர் அட்மிரல் மைக்கேல் கில்டே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நவம்பர் 5 முதல் 9 வரையிலான 5 நாள் அலுவல் ரீதியான சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் யோகோஹோமா நகரில் நடைபெற உள்ள 18ஆவது WPNS – Western Pacific Naval Symposium மேற்கு பசிஃபிக் கடற்படை கருத்தரங்கு மற்றும் யோகசுகாவில் நடைபெற உள்ள சர்வதேச கடற்படை அணிவகுப்பு IFR – International Fleet Review ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் மலபார் மற்றும் IFR ஆகியவற்றின் துவக்க விழாவில் கலந்து கொள்வார், பின்னர் WPNS, IFR, MALABAR ஆகியவற்றில் பங்கேற்கும் பன்னாட்டு கடற்படை அதிகாரிகள் தளபதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார்.

மலபார் மற்றும் சர்வதேச கடற்படை அணிவகுப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நவம்பர் 2 ஆம் தேதியே இந்திய கடற்படையின் INS SHIVALIK ஷிவாலிக் மற்றும் INS KAMORTA கமோர்த்தா ஆகிய கப்பல்கள் யோகசுகா கடற்படை தளத்தை சென்றடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் 1992ல் இந்திய அமெரிக்க கடற்படைகள் இடையேயான இருதரப்பு பயிற்சியாக துவங்கிய மலபார் தற்போது நான்கு நாட்டு கடற்படைகள் கலந்து கொள்ளும் பன்னாட்டு பயிற்சியாக 30ஆவது ஆண்டை தொட்டுள்ளது மேலும் IFR நிகழ்வு ஜப்பான் கடற்படையின் 70ஆவது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நடத்தப்படுவது கூடுதல் தகவல் ஆகும்.