அதிநவீன பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு திறனை உலகில் 4வது நாடாக பெற்ற இந்தியா !!

நேற்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO Defence Research and Development Organisation BMD Ballistic Missile Defence Phase-2 அதாவது பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பின் இரண்டாம் கட்ட தொலைதூர AD-1 ரக ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இந்த சோதனையின் போது பலிஸ்டிக் ஏவுகணை தடுப்பு அமைப்பின் அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளும் வெவ்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட்டு ஏவுகணை ஏவி சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த AD-1 ஏவுகணையை கொண்டு வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வைத்து இந்தியாவை நோக்கி வரும் 3000 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கும் பலிஸ்டிக் ஏவுகணைகளை கூட இடைமறித்து தாக்கி அழிக்க முடியும், இந்த ஏவுகணையால் தொலைதூரத்தில் வரும் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களையும் வீழ்த்த முடியும்.

இந்த ஏவுகணை இரண்டு நிலை திட எரிபொருள் என்ஜினை கொண்டதாகும், மேலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன கட்டுபாட்டு அமைப்பு, வழிகாட்டி அமைப்பு ஆகியவற்றை கொண்டதாகும், சோதனையின் போது அனைத்து திறன்களும் வெற்றிகரமாக இயங்கின, இந்தியா ஏற்கனவே 2000 கிலோமீட்டர் தொலைவு பாயும் பலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கும் திறனை பெற்றுள்ளதும்

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே நான்காவது நாடாக இந்த திறனை இந்தியா 2007ஆம் ஆண்டு பெற்றதும், உலகில் ஐந்தாவது நாடாக சீனா இந்த வருடம் இந்த திறனை பெற்றதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.