மேலும் அதிக சினூக் கனரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம் !!

  • Tamil Defense
  • November 24, 2022
  • Comments Off on மேலும் அதிக சினூக் கனரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம் !!

ரஷ்யாவிடம் இருந்து இந்திய விமானப்படைக்காக வாங்கப்பட்ட நான்கு உலகின் மிகப்பெரிய கனரக Mi-26 ஹெலிகாப்டர்கள் பல்வேறு சிக்கல்கள் காரணமாக மேம்படுத்தப்படாமல் சண்டிகர் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தனது கனரக ஹெலிகாப்டர்கள் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் இந்திய விமானப்படை மேலும் 11 புதிய போயிங் சினூக் Boeing CH-47 Chinook ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க விரும்புகிறது.

ஏற்கனவே 15 BOEING CH-47 CHINOOK கனரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வரும் இந்திய விமானப்படை கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதலாவது சினூக் ஹெலிகாப்டரை பெற்று கொண்டது வரலாறு.

அதன் பின்னர் இவை இந்திய விமானப்படையின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பெரும் வலு சேர்த்துள்ளன அதிலும் குறிப்பாக கல்வான் பிரச்சினைக்கு பிறகு கிழக்கு லடாக்கில் படை குவிப்பு நடவடிக்கைகளை சீரும் சிறப்புடனும் மேற்கொள்ள பேரூதவியாக இருந்தன என்றால் மிகையல்ல.

தற்போது இந்திய விமானப்படையின் கனரக ஹெலிகாப்டர் போக்குவரத்து பிரிவின் முதுகெலும்பாக இவை விளங்குகின்றன, மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக அதிகளவில் இவற்றை இயக்கும் மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.