இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படையினர் கத்தாரில் கைது !!

  • Tamil Defense
  • November 16, 2022
  • Comments Off on இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படையினர் கத்தாரில் கைது !!

கத்தார் நாடு இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கூறி எட்டு முன்னாள் இந்திய கடற்படையினரை மூன்று மாதங்கள் முன்னர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது இவர்கள் கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஆவார்.

இவர்கள் அனைவரையும் விடுவிக்க இந்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் கடந்த மாதம் ஒரு மூத்த இந்திய அதிகாரி இது தொடர்பாக கத்தாருக்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட எட்டு பேரும் Dahra Global Technologies & Consultancy தஹ்ரா க்ளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி எனும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர் இவர்களில் அந்த நிறுவனத்தின் MD Managing Director மேலாண் இயக்குனர் பதவியில் உள்ள முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான கமாண்டர் புர்னேந்து திவாரி என்பவரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கத்தாரில் இவர்கள் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவில் இவர்கள் தங்கியிருந்த வீடுகளில் புகுந்து கத்தார் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர் அதன் பிறகு நீண்ட நாட்களாக இவர்கள் வெளி உலகத்தை பார்க்கவோ வேறு யாரையும் தொடர்பு கொள்ளவோ முடியவில்லை.

இந்த நிலையில் இந்திய தூதரகத்திற்கு செல்ல ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வைத்து இவர்களிடம் இந்திய அதிகாரிகள் விசாரித்த போது தங்களை தனிமை சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் மிகவும் கடுமையான மனநிலை சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தது கூடுதல் தகவல் ஆகும்.