குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபருக்கு அழைப்பு !!

சமீப காலங்களில் இந்தியா எகிப்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறிப்பாக அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகள் வலுவாகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு எகிப்து அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

எகிப்திய அதிபர் அப்துல் ஃபாத்தா அல் சிஸி அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு இந்தியா ஆஃப்ரிக்க நாடுகளுடன் காட்டும் நெருக்கத்திற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது, இந்த அழைப்பு மேலும் இரு நாடுகளின் உறவை பன்மடங்கு வலுவாக்கும் என்றால் மிகையல்ல.

இந்த ஆண்டு இரண்டு நாடுகளும் தங்களது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடின, மேலும் எகிப்து ஆஃப்ரிக்க கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தி கொண்ட நாடாகும், இது தவிர அரபு நாடுகளிலேயே மிகப்பெரிய மக்கள் தொகை மிக்க நாடாகும்.

இந்த ஆண்டு இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் எகிப்து நாட்டிற்கு சுற்றுபயணமாக சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினர் அப்போது பிரதமர் மோடி எகிப்து அதிபருக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் கொடுத்தனர்.

இந்தியா ஒரு ஆஃப்ரிக்க நாட்டின் தலைவரை குடியரசு தின விழாவிற்கு தலைமை விருந்தினராக அழைப்பது இது இரண்டாவது முறையாகும், இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு தென் ஆஃப்ரிக்காவின் சிரில் ரமஃபோஸா அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

எகிப்திய அதிபர் சிஸி இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இந்திய ஆஃப்ரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார் மேலும் 2016ஆம் ஆண்டு தனிப்பட்ட சுற்றுபயணமாக இந்தியா வந்தார், இதற்கு பிறகு இந்திய பிரதமர் மோடியை ஐ.நா பொதுசபை கூட்டத்தில் சந்தித்து பேசினார், இனி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும் எகிப்து அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.