வெளிநாடுகளில் சீன காவல் நிலையங்கள்; நெதர்லாந்து கடும் எதிர்ப்பு !!

  • Tamil Defense
  • November 8, 2022
  • Comments Off on வெளிநாடுகளில் சீன காவல் நிலையங்கள்; நெதர்லாந்து கடும் எதிர்ப்பு !!

சீன காவல்துறை வெளிநாடுகளில் காவல் நிலையங்கள் அதாவது காவல்துறை சேவை மையங்களை சீனா அமைத்துள்ளது, சுமார் 5 கண்டங்களில் 54 இடங்களில் இத்தகைய மையங்கள் உள்ளன, இந்த செய்தி தற்போது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நெதர்லாந்து அரசு தனது நாட்டில் உள்ள சீன காவல்துறை சேவை மையத்தை உடனடியாக மூட வேண்டும் எனவும் தங்களிடம் இத்தகைய காவல்துறை சேவை மையங்களை அனுமதி எதுவும் பெறாமல் திறந்துள்ளதாக கூறி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பெய்ஜிங் நகரில் பேசும்போது இந்த மையங்கள் பிற நாடுகள் கூறுவது போல காவல் நிலையங்களோ அல்லது காவல்துறை சேவை மையங்களோ அல்ல எனவும் இந்த மையங்களை குறித்து யாரும் அச்சப்பட தேவை இல்லை எனவும்

காரணம் இந்த மையங்களில் சீன காவல்துறை அதிகாரிகள் பணியாற்றுவதில்லை எனவும் மாறாக அந்தந்த நாடுகளில் உள்ள சீன மக்கள் தாமாகவே முன்வந்து பணியாற்றுவதாகவும் இந்த மையங்கள் மூலமாக வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் தங்களது ஒட்டுநர் உரிமத்தை புதுப்பித்து கொள்வது போன்ற சேவைகளை பெற முடியும் எனவும் கூறினார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரத்தை சேர்ந்த Safeguard Defenders எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனா உலகளாவிய ரீதியில் காவல்துறை செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருவதாகவும், 2021-2022 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள சுமார் 2,30,000 குற்றவாளிகளை தாமாகவே நாடு திரும்ப வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கை இந்த மையங்களில் சில குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் உள்ள மையம் சீன காவல்துறையுடன் நெருங்கி செயல்படுவதாகவும், சீனா பல்வேறு வகையான மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சீனர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளதும் குறிப்பிட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.