
உக்ரைன் போர் கடந்த ஃபெப்ரவரி மாதம் துவங்கியதில் இருந்து ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகள் அதல பாதாளத்தை நோக்கி சென்றுள்ளதை அனைவரும் அறிவோம்.
இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக இருதரப்பு உறவுகளும் மோசமடைந்த சூழலிலும் கூட ரஷ்ய மற்றும் அமெரிக்க படைகளின் ரோந்து குழுவினர் சிரியாவில் சந்தித்து பேசி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டுள்ளனர்.
அதாவது அக்டோபர் 8ஆம் தேதி சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹசாகா மாகாணத்தில் துருக்கி எல்லை அருகேயுள்ள அல் கதானியா நகருக்கு அருகேயுள்ள எண்ணெய் வயல் பகுதியில் இரு நாட்டு படைகளின் ரோந்து குழுவினரும் ஒருவரை ஒருவர் தாண்டி செல்லும் போது சந்தித்து கொண்டனர்.
அப்போது அவர்கள் கலந்து பேசி புகைப்படங்கள் எடுத்து கொண்டது மட்டுமின்றி தங்களது சீருடைகளில் பயன்படுத்தப்படும் சில அடையாளங்களையும் பரிமாறி தங்களது மகிழ்ச்சியையும் வெளிபடுத்தி கொண்டனர் அது சார்ந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
சிரியாவில் அமெரிக்க படைகள் ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்தும், ரஷ்ய படைகள் அதிபர் ஆசாத்திற்கும் ஆதரவாகவும் இடையே ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்தும் சண்டையிட்டு வருகின்றன, மேலும் பலமுறை அதிபர் ஆசாத் படைகளுடன் அமெரிக்க படைகளுக்கு மோதல் ஏற்படாமல் ரஷ்ய படைகள் உதவியதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பல முறை இருநாட்டு படைகளும் சிரியாவில் சந்தித்தும் அவ்வப்போது சிறு மோதல்களில் ஈடுபட்டு இருந்தாலும் கூட உக்ரைன் போருக்கு பிறகான இந்த சந்திப்பு உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் மிகையாகாது.