கிழக்கு உக்ரைனில் உள்ள டோனேட்ஸ்க் பகுதியை ரஷ்யா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டதாக அறிவித்த நிலையில் இந்த பகுதியில் உள்ள லைமன் நகரை தற்போது உக்ரைனிய படைகள் கைபற்றி உள்ளன.
ரஷ்ய படைகள் இந்த நகரத்தை தங்களின் களமுன்னனி கட்டுபாட்டு மையமாக பயன்படுத்தி வந்த நிலையில் இங்கிருந்து ரஷ்ய படைகள் உக்ரைனிய படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பின்வாங்கி உள்ளனர்.
இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடட்டுள்ள அறிக்கையில் லைமன் நகரை கைபற்ற சண்டையிட்ட உக்ரைன் படைகள் மீது கடுமையான சேதத்தை விளைவித்து உள்ளதாகவும் தற்போது இன்னும் வசதியான இடங்களை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் கிழக்க உக்ரைனில் உள்ள க்ரெமன்னயா, ஆர்ட்யோமோவ்ஸ்க் மற்றும் அவ்டிகா போன்ற டோனேட்ஸ்க் பிராந்திர நகரங்களில் நிலை கொண்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய படைகள் இப்படி பின்வாங்கியது பல ரஷ்ய நாட்டு தலைவர்களையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது, செச்சென் மாகாண முதல்வரும் அதிபர் புடினின் நெருங்கிய கூட்டாளியுமான ரம்சான் காதிரோவ் இப்படி தேவையில்லாமல் பின்வாங்கிரது மிகவும் தவறு , கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனிய படைகள் செப்டம்பர் முதல் ரஷ்ய படைகளுடன் கடுமையாக சண்டையிட்டு பல்வேறு பகுதிகளை மீட்டுள்ளனர், சமீபத்தில் கார்கிவ் பகுதியில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றி ஆஸ்கில் நதிக்கு மறுபக்கம் பின்வாங்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.