விரைவில் இந்தியா வர உள்ள மூன்றாவது S400 படையணிக்கான அமைப்புகள் !!
ஏற்கனவே இரண்டு S400 வான் பாதுகாப்பு படையணிகள் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து இந்தியாவுக்கு மூன்றாவது S400 படையணிக்கு தேவையான வான் பாதுகாப்பு அமைப்பின் அமைப்புகளின் டெலிவரி துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு S400 படையணி வடக்கு பஞ்சாபிலும், இரண்டாவது S400 படையணி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிக்கன் நெக் காரிடார் எனும் வடகிழக்கு மாநிலங்களை இந்திய நிலபரப்புடன் இணைக்கும் மிகவும் குறுகிய பகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளன.
இந்தியா தனது S400 அமைப்புகளை குறைந்து வரும் விமானப்படை படையணியின் பலத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் எதிரி தாக்குவதற்கு எளிதான பகுதிகளிலும் அந்த பகுதிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து களமிறக்கி வருகிறது.
இரண்டாவது S400 வான் பாதுகாப்பு அமைப்பானது ஃபெப்ரவரி மாதம் உக்ரைன் மீதான படையெடுப்பு துவங்கிய பிறகே டெலிவரி செய்யப்பட்டது இந்த மூன்றாவது அமைப்பு ராஜஸ்தான் பகுதியில் நிலைநிறுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
35,000 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் ஐந்து S400 வான் பாதுகாப்பு அமைப்புகளும் ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் போன்றவற்றை இடைமறித்து அழிக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும்.
மேலும் இந்த அமைப்புகள் 600 கிலோமீட்டர் தொலைவிலேயே இலக்குகளை கண்டுபிடித்து முறையே 400, 250 , 120 , 40 கிலோமீட்டர் தொலைவுகளில் எதிரி இலக்கை தாக்கும் வகையில் நான்கு அடுக்கு வான் பாதுகாப்பு அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.