
பொதுத்துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது தேஜாஸ் மார்க்-2 நடுத்தர போர் விமானத்தை தயாரிக்கும் பணிகளை துவங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதில் ஒரு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது இந்த போர் விமானத்தை தனியார் பொதுத்துறை நிறுவனங்கள் கூட்டாக பங்களித்து உருவாக்குவது தான் திட்டம் ஆனால் அதிக தயாரிப்பு செலவு மற்றும் குறைந்த லாபம் காரணமாக தனியார் நிறுவனங்கள் எதுவும் இந்த திட்டத்தில் இணைய முன்வரவில்லை.
ஆகவே தனியார் துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவிருந்த பல்வேறு போர் விமான பாகங்களை தற்போது ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் HAL – Hindustan Aeronautics Limited நிறுவனமே தயாரிக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது ஆகவே இதனால் காலதாமதம் ஆகும் நிலையும் உருவாகி உள்ளது.
செப்டம்பர் மாதம் பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் தேஜாஸ் மார்க்-2 திட்டத்திற்கு முழு ஒப்புதல் அளித்த நிலையில் 2023ல் முதல் பறத்தல் மற்றும் 2024ல் மூன்று சோதனை விமானங்களை ஒப்படைத்தல் ஆகியவை திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
17.5 டன்கள் எடை கொண்ட தேஜாஸ் மார்க்-2 போர் விமானம், 14.6 மீட்டர் நீளமும் 8.5 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டிருக்கும் மேலும் இதனால் சுமார் 6.5 டன்கள் எடையிலான ஆயுதங்களையும் எரிபொருளையும் சுமக்க முடியும், இதன் மூக்கு பகுதியில் இரண்டு சிறிய இறக்கைகள் இருக்கும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.