திருமணத்திற்கு சில நாட்கள் முன் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ அதிகாரி !!

சமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலம் டூடிங் பகுதியில் இந்திய தரைப்படையின் 225ஆவது வான்படை அணியின் ருத்ரா ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.

இதில் மேஜர் முஸ்தஃபா போஹ்ரா எனும் இளம் ராணுவ அதிகாரி மற்றும் விமானியும் வீரமரணம் அடைந்தார், இவர் வீட்டிற்கு ஒரே மகன் ஆவார், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் NDA தேர்வெழுதி இந்திய தரைப்படையில் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கேரோடா தான் இவரது சொந்த ஊராகும், இவரது தந்தை ஸகியுத்தீன் போஹ்ரா குவைத்தில் பணியாற்றி வருகிறார், தாயார் ஃபாத்திமா போஹ்ரா மற்றும் சகோதரி அலெஃபியா போஹ்ரா ஆகியார் தான் இவரது குடும்பத்தினர்.

தாய் மற்றும் சகோதரி ஆகியோர் அதிர்ச்சி மற்றும் துக்கம் தாளாமல் மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர், தந்தையும் நாடு திரும்பி உள்ளார்.

சற்று நாட்களுக்கு முன்னர் தான் மேஜர் முஸ்தஃபா போஹ்ரா தனது பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்றார் விரைவில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அவரது மரண செய்தி அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.