நேற்று உக்ரைன் மீது சுமார் 75 ஏவுகணைகளை ரஷ்யா அடுத்தடுத்து ஏவியுள்ளது பல ஏவுகணைகள் உக்ரைன் தலைநகர் க்யிவ் நகரை குறிவைத்து ஏவப்பட்டன, இதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி ரஷ்யா தங்களை அடியோடு அழிக்க நினைப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
ரஷ்யாவின் இந்த தாக்குதல்களில் 8 பேர் மரணத்தை தழுவிய நிலையில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், ஏவப்பட்ட 75 ஏவுகணைகளில் 41 ஏவுகணைகளை இடைமறித்து வானிலேயே அழித்துவிட்டதாக உக்ரைன் தளபதி ஜெனரல் வலேரி ஸலூஸ்னி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் க்யிவ், மத்திய உக்ரைனில் உள்ள டினிப்ரோ, மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ், டெர்னோபில் மற்றும் ஸைடோமிர் ஆகிய நகரங்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.
க்ரைமியா தீபகற்ப பகுதியை ரஷ்ய நிலபரப்புடன் இணைக்கும் பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான பதிலடியாக ரஷ்யாவின் இந்த ஏவுகணை தாக்குதல்கள் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.