உக்ரைன் மீது படையெடுத்து சுமார் 6 மாதங்கள் ஆன பின்னரும் ரஷ்யாவால் உக்ரைனை வீழ்த்த முடியவில்லை தொடர்ச்சியாக ரஷ்ய படைகள் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றன, பல இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியும் வருகின்றன.
இந்த நிலையில் ரஷ்யா தற்போது உக்ரைன் படையெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து ரஷ்ய படைகளையும் வழிநடத்த ஒரு புதிய தளபதியை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அதாவது ஜெனரல் செர்கேய் சுரோவிகின் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக தகவல்களின்பிட ஜெனரல் செர்கேய் சுரோவிகின் சைபிரியாவில் உள்ள நோவோசிபிரிஸ்க் பகுதியில் பிறந்துள்ளார், 55 வயதான அவருக்கு தஜிகிஸ்தான், செச்சென்யா போர்களிலும், 2015 சிரிய போரிலும் பங்கேற்ற படைகளை வழிநடத்திய அனுபவம் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது உக்ரைன் மீதான படையெடுப்பு நடவடிக்கையில் தெற்கு உக்ரைனில் போரிட்டு வரும் ரஷ்ய படைகளை அவர் வழிநடத்தி வந்துள்ளார் தற்போது ஒட்டுமொத்த போர் நடவடிக்கைக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த பொறுப்பில் இருந்தவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை ஆனால் அந்த பொறுப்பில் செச்சென் மற்றும் சிரிய போரில் பங்கேற்ற அனுபவம் வாய்ந்த ஜெனரல் அலெக்சாண்டர் ட்வோர்னிகோவ் இருந்தார் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் ஆரம்பத்தில் பெற்ற வெற்றிக்கு பிறகு ரஷ்ய படைகள் சந்தித்து வரும் தொடர் தோல்விகள் காரணமாக நாட்டின் மூத்த தலைமைகள் மீது ரஷ்ய அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் தீவிர அதிருப்தி நிலவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.