பாகிஸ்தானிய கடலோர காவல்படையிடம் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு; இந்திய கடலோர காவல் அதிரடி !!
1 min read

பாகிஸ்தானிய கடலோர காவல்படையிடம் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு; இந்திய கடலோர காவல் அதிரடி !!

இந்திய மீனவர்களை பாகிஸ்தானிய கடலோர காவல்படை சிறைபிடித்து சென்ற நிலையில் அவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்ட செய்தி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீன்பிடி படகான ஹர்சித்தி-5 ஜகாவ் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது உதவி கேட்டு கோரிக்கை விடுத்ததை சற்று தொலைவில் இருந்த இந்திய கடலோர காவல்படை கலன் ICGS ARINJAY அரின்ஜய் பெற்று கொண்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அரின்ஜய் அங்கு படகின் சிதிலமும், பாகிஸ்தானிய கடலோர காவல்படைக்கு சொந்தமான PMSS BARAKAT பராகத் கப்பலின் உயிர்காப்பு மிதவைகளை பற்றி கொண்டு மிதந்து கொண்டிருந்த மீனவர் ஒருவரையும் கண்டனர்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சை அளித்த நிலையில் அந்த மீனவர் பாகிஸ்தானிய கடலோர காவல்படை படகு தங்களது படகின் மீது துப்பாக்கியால் சுட்டும் இருமுறை மோதியும் தாக்குதல் நடத்தி படகை மூழ்கடித்து விட்டு ஆறு சக மீனவர்களை சிறைபிடித்து சென்றதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தானிய கடலோர காவல்படை படகான பராகத்தை தொடர்பு கொண்டு விரட்டி சென்று மீனவர்களை விடுவிக்க இந்திய கடலோர காவல்படை குழுவினர் வலியுறுத்திய நிலையில் சர்வதேச கடல்சார் எல்லையில் இந்திய மீனவர்களை விடுவித்து விட்டு பாகிஸ்தானிய படகு திரும்பி சென்றது.

ஏழு மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு ஜகாவ் கொண்டு வரப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ராஜாங்க ரீதியாக இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.