இந்திய தரைப்படையின் புதிய தலைமையகம் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • October 30, 2022
  • Comments Off on இந்திய தரைப்படையின் புதிய தலைமையகம் ஒரு பார்வை !!

தற்போது இந்திய தரைப்படைக்கென தனியாக தலைமையகம் இல்லாத காரணத்தால் தலைமையகத்தின் பல்வேறு அலுவலகங்கள் தலைநகர் தில்லியின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.

ஆகவே தற்போது இந்திய தரைப்படைக்கென ஒரு புதிய அதிநவீன தலைமையகம் ஒன்றை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது, இது சுமார் 39 ஏக்கர் பரப்பளவில் தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் மானெக்ஷா மையத்திற்கு எதிரே அமைய உள்ளது.

இதற்கு சுமார் 757 கோடி ரூபாய் நிதியை பாதுகாப்பு அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இதன் கட்டுமானத்தை 27 மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு டென்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆறு மாடிகள் கண்ட புதிய கட்டிடத்தின் உச்சியில் தர்மா சக்கரம் எனும் சக்கரம் காணப்படும், பசுமை சூழல் அதிகமாக இருக்கும், நிகழ்ச்சிகளுக்கான மையம், மிகப்பெரிய அதிநவீன உடற்பயிற்சி நிலையம், பல்வேறு அலுவலகங்கள் போன்றவை காணப்படும்.

லெஃப்டினன்ட் ஜெனரல், மேஜர் ஜெனரல், பிரிகேடியர், கர்னல், லெஃப்டினன்ட் கர்னல், மேஜர், பல்வேறு துறைகளின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் போன்றோருக்கான அதிகாரிகள் அலுவலகங்கள் காணப்படும்.

7.5 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவில் 6014 அலுவலகங்கள், பாதுகாப்பு வீரர்களுக்கான உறைவிடங்கள் ஆகியவை இருக்கும் மேலும் விமான நிலையத்திற்கு அருகே இருப்பதால் விமான நிலைய ஆணையம் உயர கட்டுபாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.