ரஷ்யாவை நேட்டோ தாக்க வேண்டும் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி !!

  • Tamil Defense
  • October 8, 2022
  • Comments Off on ரஷ்யாவை நேட்டோ தாக்க வேண்டும் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி !!

உக்ரைனிய அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கக்கூடாது அந்த வகையில் நேட்டோ அமைப்பானது ரஷ்யாவை தாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா தாக்குதல் நடத்தும் வரை பொறுமையாக இருந்துவிட்டு பின்னர் ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பதை விடவும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை உடன் ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பதை பற்றி சிந்தித்தாக வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கருத்துக்களை அவர் ஆஸ்திரேலியாவை சேரந்த லோவி அமைப்புக்கு அளித்த உரையில் தெரிவித்தார், இந்த அமைப்பானது உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.

உக்ரைன் அதிபரின் இந்த கருத்து குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஸகரோவா பேசும்போது செலன்ஸ்கி இந்த உலகத்தையே அழித்து விடுவார் எனவும் அணு ஆயுத போரை விரும்புகிறார் எனவும் கூறினார்.

அதே போல் ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளினுடைய செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், உக்ரைன் அதிபரின் பேச்சை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டால் உலகம் கண்டிராத மோசமான போரில் தான் போய் முடியும் என்றார்.

உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கியின் ஊடக செயலாளர் செர்ஹி நிகிஃபோரோவ் அதிபர் செலன்ஸ்கி அணு ஆயுத தாக்குதல் நடத்துவதை பற்றி பேசவில்லை ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பேசியதாக விளக்கம் அளித்துள்ளார்.