சென்னை ஐஐடியின் ராம்ஜெட் திறன் கொண்ட பிரங்கி குண்டு இந்த ஆண்டு பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகம் !!

  • Tamil Defense
  • October 14, 2022
  • Comments Off on சென்னை ஐஐடியின் ராம்ஜெட் திறன் கொண்ட பிரங்கி குண்டு இந்த ஆண்டு பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகம் !!

சென்னை ஐஐடியின் ஏரோஸ்பேஸ் பொறியியல் பிரிவானது எந்தவொரு 155 மில்லிமீட்டர் பிரங்கியாலும் சுடக்கூடிய அடுத்த தலைமுறை ராம்ஜெட் திறன் கொண்ட பிரங்கி குண்டு ஒன்றினை தயாரித்து வருகிறது, இதன் மாடல் இந்த ஆண்டு பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த அதிநவீன அடுத்த தலைமுறை பிரங்கி குண்டானது சுமார் 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குளை தாக்கும் வகையில் தயாரிக்கப்படும் ஆகவே இந்த குண்டானது இந்திய தரைப்படையின் தொலைதூர துல்லிய தாக்குதல் திறன்சார்ந்த தேவைகளை சந்திக்கும் என்றால் மிகையாகாது.

இந்த ராம்ஜெட் பிரங்கி குண்டு முன்பகுதியில் உள்ள இடைவெளி வழியாக காற்றை உள்ளே இழுத்து எரிபொருளுடன் இணைத்து எரித்து அழுத்தத்தை அதிகரித்து அதனை வெளியேற்றி சூப்பர்சானிக் வேகத்தை எட்ட உதவும் என கூறப்படுகிறது, இதனை தயாரிக்க 2.5 ஆண்டுகள் நேரமும் 9.85 கோடி ரூபாய் நிதியும் தேவை என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இந்த ராம்ஜெட் பிரங்கி குண்டை 155×45 காலிபர் திறன் கொண்ட தனுஷ் பிரங்கி மூலமாக சுடும்போது 61 கிலோமீட்டர் தூரமும், 155×52 காலிபர் திறன் கொண்ட K9 Vajra கே9 வஜ்ரா பிரங்கியில் இருந்து சுடும்போது 68 கிலோமீட்டர் தூரமும், 155×52 காலிபர் திறனும் 25 லிட்டர் கொள்ளளவு அறையும் கொண்ட ATAGS பிரங்கியில் இருந்து சுடும்போது 78 கிலோமீட்டர் தொலைவும் சென்று தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.