லடாக்கில் பிற ஹெலிகாப்டர்களை தோற்கடித்த சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டர் ப்ரச்சந்த், நமது வீரர்களையே குழப்பிய சுவாரஸ்ய சம்பவம் !!

  • Tamil Defense
  • October 6, 2022
  • Comments Off on லடாக்கில் பிற ஹெலிகாப்டர்களை தோற்கடித்த சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டர் ப்ரச்சந்த், நமது வீரர்களையே குழப்பிய சுவாரஸ்ய சம்பவம் !!

இந்திய விமானப்படையின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஹெலிகாப்டர் விமானிகளும் சுதேசி இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் திட்டத்தின் சோதனை விமானிகளுமான க்ரூப் கேப்டன் ஹரி நாயர் மற்றும் விங் கமாண்டர் ஜாண் ஆகியோர் சமீபத்தில் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரான ப்ரச்சந்த் காளை மாதிரியான வேகமும் வலுவும் ஆக்ரோஷமும் கொண்டது ஆனால் அதே நேரத்தில் கட்டுபடுத்த குழந்தை போன்றது எனவும்,அனைத்து வகையான காலநிலைகளிலும் மிகவும் சிறப்பாக செயல்படும் , இமயமலை பிராந்தியத்திலும் சிறப்பாக செயல்படும், சுமார் 21,000 அடி உயரம் வரை பறக்கும் ஆற்றல் கொண்டது எனவும் கூறினர்

மேலும் அதனுடைய உடல்வாகு காரணமாக மிகவும் குறைவான நேரத்தில் மணிக்கு 330 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் எனவும், கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட எலாஸ்டோமெட்ரிக் ரோட்டார் அமைப்பானது நன்கு கையாள உதவியாக உள்ளதாகவும் இதில் பொருத்தப்பட்டுள்ள ஷக்தி என்ஜின் அதிக உயரத்தில் திறன் குறையாமல் இருக்க பல்வேறு வகையான அம்சங்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதே போல இரவில் பறக்க தேவையான கருவிகளில் இருந்து வெளிப்படும் பிரதிபலிப்பு அதிகமாக இருந்ததால் இரவில் பார்க்கும் கருவிகளை பயன்படுத்துவதில் சிக்கல் நிலவியது ஆகவே இதையும் சரி செய்ய வேண்டி இருந்தது, மேலும் வேகத்தை அளக்கும் “பிடாட் குழாய்” மற்றும் ஹீட்டர் கருவிகளை சரியான இடத்தில் வைக்க மெனக்கெட வேண்டி இருந்தது.

முதலில் நாங்கள் இதனை ஜனமேஜயா என பெயரிட்ட போது அது சரிவரவில்லை ஆகவே தனுஷ் என பெயரிட்டோம் இந்த ஹெலிகாப்டர் படையில் இணைக்கப்படும் நாள் வரை தனுஷ் என்று தான் அழைக்கப்பட்டது, தற்போது படையில் இணைக்கப்பட்டு இதற்கு ராணுவம் ப்ரச்சந்த் என பெயரிட்டுள்ளது.

நாங்கள் 2020 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் லடாக்கில் நிலைமை உக்கிரமாக இருந்த போது களமிறக்கப்பட்டோம், ஒரே நாளில் தயாராகி தவ்லத் பெக் ஒல்டி, லுகுங், தெம்சாக் போன்ற இடங்களில் இயங்கினோம், இந்த காலகட்டத்தில் எந்தவித சிக்கலும் இன்றி இவை இயங்கின.

மைனஸ் 35 டிகிரி குளிரில் எந்த வித பராமரிப்பும் இன்றி தொடர்ந்து இயங்கிய இவை, பல முறை தங்களுக்கு முன் புறப்பட்ட ஹெலிகாப்டர்களை மூந்தி சென்று அதிக உயரங்களில் பறந்து சியாச்சின் அடிவார முகாமை அடைந்து புதிய சாதனை படைத்தது என இருவரும் கூறினர்.

மேலும் இரவு நேரத்தில் சீன எல்லையோரம் பறந்தது முற்றிலும் புதிய அனுபவம். சென்னை, சன்டிப்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மர் என அனைத்து இடங்களிலும் இது பறந்தது, ஆயுத சோதனைகளின் ஒரு பகுதியாக வங்க கடலில் மோசமான காலநிலையிலும் பறந்தோம்.

அதே போல் இந்த ஹெலிகாப்டரின் வினோதமான மற்றும் புதிய உடலமைப்பு சில நேரங்களில் எல்லையோரம் ரோந்து செல்லும் நமது வீரர்களையே குழப்பி அவர்கள் எல்லைக்குள் எதிரி ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் அளித்த சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறு க்ரூப் கேப்டன் ஹரி நாயர் மற்றும் விங் கமாண்டர் ஜாண் ஆகியோர் தங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.