இந்தியாவுக்கு போர் கப்பல்களுக்கான உலகின் முதல் ஸ்டெல்த் ஆன்டென்னாவை ஏற்றுமதி செய்ய ஜப்பான் விருப்பம் !!

  • Tamil Defense
  • October 16, 2022
  • Comments Off on இந்தியாவுக்கு போர் கப்பல்களுக்கான உலகின் முதல் ஸ்டெல்த் ஆன்டென்னாவை ஏற்றுமதி செய்ய ஜப்பான் விருப்பம் !!

ஜப்பான் தான் தயாரித்த உலகின் முதல் ஸ்டெல்த் ஆன்டென்னா அமைப்பான NORA-50 எனப்படும் ஒருங்கிணைந்த ஆன்டென்னா அமைப்பை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இது ஒற்றை கொம்பு போல உள்ளதால் Unicorn எனவும் அழைக்கிறார்கள்.

இந்த ஒருங்கிணைந்த ஆன்டென்னா அமைப்பானது இந்த ஆண்டு ஜப்பான் கடற்படையில் இணைந்த JS KUMANO (குமானோ) மற்றும் JS MOGAMI (மொகாமி) ஆகிய இரண்டு ஸ்டெல்த் ஃப்ரிகேட் ரக போர் கப்பல்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த ஸ்டெல்த் ஆன்டென்னாக்கள் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்தது.

பொதுவாக பல ஆன்டென்னாக்கள் போர் கப்பல்களில் ஆங்காங்கே நீட்டி கொண்டிருப்பதை பார்க்க முடியும் அவை ரேடார் அலைவரிசைகளை பிரதிபலிக்கும் ஆகவே ரேடாரில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம் இது கப்பலின் ஸ்டெல்த் திறனுக்கு ஒரு சவாலாகும், ஆனால் இந்த ஒருங்கிணைந்த ஆன்டென்னா ஸ்டெல்த் திறனை அதிகரிக்கும்.

இந்த ஒருங்கிணைந்த ஆன்டென்னா அமைப்பிற்குள் செயற்கை கோள் தொடர்பு,தகவல் தொடர்பு, வழிகாட்டி அமைப்பு, தகவல் பரிமாற்றம் போன்றவற்றிற்கான ஆன்டென்னாக்கள் அமைந்து இருக்கும் என கூறப்படுகிறது, செப்டம்பர் மாதம் ஜப்பானில் இருதரப்பு வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெற்ற போது இது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி அப்போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகசுகா கடற்படை தளம் சென்று மொகாமி கப்பலையும் அதில் உள்ள ஒருங்கிணைந்த ஆன்டென்னா அமைப்பையும் பார்வையிட்டு இந்த அமைப்பின் பரிமாற்றத்திற்கு ஒப்பு கொள்ளப்பட்டது, இனி இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இதன் பரிமாற்றத்திற்கு இறுதி ஒப்புதல் கிடைத்தால் 2015ஆம் ஆண்டு இந்தியா ஜப்பான் இடையே கையெழுத்தான பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் முதலாவது பரிமாற்றம் இதுவாக தான் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

எனினும் ஜப்பான் இதில் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறது, ஜப்பான் அரசியல் சாசனம் போரை எதிர்க்கும் குணாதிசயம் கொண்டது ஆகையால் இந்த அமைப்பை இந்தியா தாக்குதல் கப்பல்களில் பயன்படுத்தாமல் மாறாக கண்ணிவெடி போர்முறை மற்றும் கண்காணிப்பு கப்பல்களல் போன்ற தாக்குதல் திறனற்ற கப்பல்களில் பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும், எது எப்படியோ இந்த செய்தி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.