கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மிகவும் தீவிரமான கடல் சோதனைகளில் ஈடுபட்டுள்ள ஐ.என்.எஸ். அரிகாட் INS ARIGHAT அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது இந்தியாவின் இரண்டாவது சுதேசி அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் என்பதும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்பதும் இதன் சிறப்பம்சம் ஆகும்.
இந்தியாவின் முதலாவது சுதேசி அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலான INS ARIHANT ஐ.என்.எஸ். அரிஹந்த் போன்றே 6000 டன்கள் எடையுடன் 750 கிலோமீட்டர் பாயும் 12 “K-15” அல்லது 3500 கிலோமீட்டர் பாயும் 4 “K-4” ரக அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மூன்றாவது சுதேசி அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலான S4 2021ஆம் ஆண்டு கடல் சோதனைகளில் ஈடுபட்டு உள்ளது, நான்காவது சுதேசி அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலானது விசாகப்பட்டினத்தில் கட்டுமானத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
S4 ரக நீர்மூழ்கி கப்பலானது அரிஹந்த் மற்றும் அரிகாட் ஆகியவற்றை விடவும் சற்றே பெரியதாக இருக்கும் இவை இரண்டை விடவும் இரண்டு மடங்கு அதிகமான ஏவுகணைகளை அதாவது எட்டு K-4 அல்லது 24 K-15 ரக அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்கும் இதற்காக இவற்றின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது செயற்கை கோள் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இவற்றிற்கு அடுத்தபடியாக இந்தியா S5 எனும் பிரமாண்ட சுதேசி அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலை கட்டமைக்க உள்ளது இதன் எடை சுமார் 13,500 டன்களாக இருக்கும் அரிஹந்தை விட இரண்டு மடங்கு பெரியதான இது 8000 கிலோமீட்டர் பாயும் 12 அணு ஆயுத ஏவுகணைகளை சுமக்கும்.
மேலும் இந்திய அரசு 6000 டன்கள் எடை கொண்ட 6 அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டவும் திட்டமிட்டு உள்ளது இவை க்ரூஸ் ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் நீரடிகணைகளை சுமக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.