மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு சிறப்பு நிதி கோர உள்ள இந்திய கடற்படை !!

இந்திய கடற்படையின் உயர்மட்ட குழு ஒன்று விரைவில் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி ஆதார பிரிவை அடுத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான சிறப்பு நிதிக்கான கோரிக்கை அளிக்க நாட உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறப்பு நிதிக்கு ஒப்புதல் கிடைத்தால் முதல்கட்ட பணிகள் துவங்கும் குறிப்பாக இந்திய கடற்படையின் Warship Design Bureau போர்கப்பல் வடிவமைப்பு முகமை மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை துவங்கும் என கூறப்படுகிறது.

இந்திய கடற்படை 2030ஆம் ஆண்டு வாக்கில் சீன கடற்படை இந்திய பெருங்கடல் பகுதிக்கென பிரத்தியேக விமானந்தாங்கி கப்பல் படையணியை களமிறக்கும் என்பதால் இரண்டாவது சுதேசி அதாவது மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் இன்றியமையாத தேவை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதே நேரத்தில் இந்திய கடற்படை தற்போதுள்ள 45,000 டன்கள் எடையிலான விமானந்தாங்கி கப்பலை தவிர்த்து விட்டு அதைவிட அதிநவீன மேம்படுத்தப்பட்ட அளவில் பெரிய சுமார் 65,000 டன்கள் எடையிலான விமானந்தாங்கி கப்பலை இணைப்பதையே விரும்புவது கூடுதல் தகவல் ஆகும்.