இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்திய படை தளங்கள் மற்றும் கண்காணிப்பு தளங்களின் பட்டியல் !!

  • Tamil Defense
  • October 14, 2022
  • Comments Off on இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்திய படை தளங்கள் மற்றும் கண்காணிப்பு தளங்களின் பட்டியல் !!

பூட்டான்: இந்திய தரைப்படையின் அணி ஒன்று மேற்கு பூட்டானில் உள்ள ஹா டோஸோங் பகுதியில் உள்ள தளத்தில் பூட்டான் அரசரின் மெய் காவலர்கள் மற்றும் பூட்டான் தரைப்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது, இந்த படையணி IMTRAT – Indian Military Training Team அதாவது இந்திய ராணுவ பயிற்சி அணி என அழைக்கப்படுகிறது, மேஜர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரி தான் இதற்கு பொறுப்பு மேலும் பூட்டானில் பாதுகாப்பு அமைச்சர் இல்லாத காரணத்தால் மேற்குறிப்பிட்ட அதிகாரி தான் பூட்டான் மன்னருக்கு ராணுவ ஆலோசகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாபஹார் -ஈரான்: கிழக்கு ஈரானில் ஒமன் வளைகுடா அருகே அமைந்துள்ள துறைமுகம் தான் சாபஹார், பாகிஸ்தானுக்கு சவால் விடுக்கவும் இந்த பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் இந்தியாவுக்கு இந்த சாபஹார் துறைமுகம் இன்றியமையாதது என்றால் மிகையாகாது.

மடகாஸ்கர்: மடகாஸ்கர் நாட்டுடன் இந்தியாவுக்கு நெருங்கிய அரசியல் பொருளாதார மற்றும் ராணுவ உறவுகள் உண்டு, மேற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான மடகாஸ்கரின் வடக்கு பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியா அந்த பகுதியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களையும் கண்காணிக்க ஒரு கண்காணிப்பு நிலையத்தை அமைத்தது.

மாலத்தீவு: இந்தியாவுக்கு மிகவும் அருகேயுள்ள தீவு நாடுகளில் மாலத்தீவும் ஒன்றாகும், மாலத்தீவு நாட்டுடனும் இந்தியாவுக்கு மிகவும் நெருங்கிய அரசியல் பொருளாதார மற்றும் ராணுவ உறவுகள் உள்ளன மேலும் அவ்வப்போது மாலத்தீவு படைகளுடன் கூட்டுபயிற்சி நடத்துவதும் அவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதும் நடைபெறுகிறது, இங்கு இந்திய கடற்படையின் கண்காணிப்பு தளம் ஒன்றும் உள்ளது.

மொஸாம்பிக்: இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள இந்தியாவின் மற்றுமொரு நெருங்கிய நட்பு நாடு தான் மொஸாம்பிக் ஆகும், அதாவது ஆஃப்ரிக்க கண்டத்தின் தென் பகுதியில் தென் ஆஃப்ரிக்க நாட்டிற்கு மேலே உள்ளது இதற்கும் மடகாஸ்கர் தீவு நாட்டிற்கும் இடையே மொஸாம்பிக் சானல் எனும் இந்தியா இலங்கை இடையிலான பாக் ஜலசந்தி போன்ற ஜலசந்தி ஒன்று அமைந்துள்ளது, இங்கு இந்திய கடற்படை தான் ரோந்து பணியை மேற்கொள்கிறது.

மாவ்ரீஷியஸ்: ஆஃப்ரிக்க கண்டத்தில் இருந்து சற்றே தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு தான் மாவ்ரீஷியஸ் ஆகும், இதுவும் இந்தியாவின் மிக மிக நெருங்கிய நட்பு நாடு இரண்டு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ராணுவ பொருளாதார அரசியல் உறவுகள் உள்ள நிலையில் இந்த நாட்டின் வடக்கு அகலேகா தீவில் நீளமான விமான ஒடுதளம் கொண்ட மிகப்பெரிய கடற்படை தளம் மற்றும் கண்காணிப்பு தளத்தை அமைத்து வருகிறது.

நேபாளம்: நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சுர்கேத் எனும் பகுதியில் உள்ள விமான தளத்தை இந்திய விமானப்படை பயன்படுத்தவும் தேவைப்பட்டால் நேபாளத்திற்கு பாதுகாப்பு வழங்கவும் இந்த விமான தளம் பயன்படுத்தப்படும்.

ஒமன்: இந்தியாவின் நட்பு நாடான ஒமனில் தென்கிழக்கே அமைந்துள்ள ராஸ் அல் ஹட் பகுதியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பு தளம் ஒன்று அமைந்துள்ளது மேலும் மஸ்கட் மற்றும் துக்கம் துறைமுகங்களை இந்திய கடற்படை பயன்படுத்தி கொள்வதற்கான உரிமம் மற்றும் துக்கம் விமான நிலையத்தை இந்திய விமானப்படை பயன்படுத்தி கொள்வதற்கான உரிமம் ஆகியவை உண்டு.

செஷல்ஸ்: இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் மாவ்ரீஷியஸ் நாட்டிற்கு அருகே அமைந்துள்ள மற்றொரு நெருங்கிய நட்பு நாடு செஷல்ஸ் ஆகும், இந்நாட்டின் ராணுவத்திற்கு பயிற்சி மற்றும் தளவாடங்களை அளிப்பது, பொருளாதார உதவிகள் அளிப்பது என நல்ல உறவுகள் உள்ளது, இந்த நாட்டில் இந்தியாவுக்கு ஒரு கடலோர ரேடார் நிலையம் உள்ளது.

சிங்கப்பூர்: தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் இந்தியாவின் நட்பு நாடாகும், இங்குள்ள சாங்கி துறைமுகத்தை இந்திய கடற்படை எரிபொருள் மற்றும் இதர சப்ளைகளை நிரப்பி கொள்ள பயன்படுத்தி கொள்வதற்கான உரிமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தஜிகிஸ்தான்: முன்னாள் சோவியத் மற்றும் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் உடனும் இந்தியாவுக்கு நல்ல நட்புறவு உள்ளது, இந்த நாட்டின் இந்த நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ள ஃபார்கோர் விமானப்படை தளம் தான் இந்தியாவின் முதலாவது வெளிநாட்டு தளமாகும், இங்கிருந்து தான் ஆஃப்கானிஸ்தானில் 90களின் இறுதியில் தாலிபான்களை எதிர்த்து சண்டையிட்ட வடக்கு கூட்டணி வீரர்கள் மற்றும் அவர்களின் தலைவர் மஹ்மூத் ஷா மஹ்ஸூத் ஆகியோருக்கு சிகிச்சை அளித்தது மேலும் ஆயுத உதவிகளை இந்தியா செய்தது, மேலும் அந்நாட்டின் மேற்கே அமைந்துள்ள ஆய்னி அல்லது ஹிசார் விமானப்படை தளம் இந்தியாவின் இரண்டாவது வெளிநாட்டு விமானப்படை தளமாகும், 2014 முதல் இந்திய விமானப்படையின் Su-30 MKI போர் விமானங்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன, சமீபத்தில் ஆஃப்கானிஸ்தான் மீட்பு நடவடிக்கையின் போதும் இந்த தளத்தை தான் இந்தியா பயன்படுத்தியது, 2005 முதல் செயல்பாட்டுக்கு வந்த இந்த தளத்தின் முதல் கட்டளை அதிகாரி முன்னாள் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பிரேந்திர சிங் தனோவா என்பது கூடுதல் சிறப்பாகும்.

வியட்நாம்: தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியாவின் மிக மிக நெருங்கிய நட்பு நாடு வியட்நாம் ஆகும், சீன எதிர்ப்பு மனநிலை இரண்டு நாடுகளையும் இணைக்கிறது இரு நாடுகள் இடையே நெருங்கிய அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் நீடிக்கிறது, வியட்நாம் எண்ணெய் வளம் கண்டறிய எண்ணெய் கிணறு அமைக்க இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளது, அது போல வியட்நாம் படைகளுக்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது மேலும் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்திய கடற்படை அந்நாட்டின் தெற்கு உள்ள காம் ரான் பே படைத்தளத்தை பயன்படுத்தி கொள்ள வியட்நாம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தோனேசியா: இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஆச்செ மாகாணத்தில் உள்ள சபாங் பகுதியில் இந்தியா ஒரு ஆழ்கடல் துறைமுகத்தை நிறுவி வருகிறது மேலும் இதனை பயன்படுத்தி கொள்ளும் உரிமையும் இந்திய கடற்படைக்கு உள்ளது, இதன் சிறப்பு இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே அமைந்துள்ளது மேலும் சீன கடற்படையை இங்கிருந்து எதிர்கொள்ள முடியும் என்பதாகும்.