350 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் காவல்துறை !!
1 min read

350 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் காவல்துறை !!

குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு 7ஆம் தேதி அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்படை தனது C-429 மற்றும் C-454 ரக அதிவேக இடைமறிப்பு மற்றும் ரோந்து கலன்களை களமிறக்கி ரோந்து பணி மேற்கொண்டது.

இந்த நிலையில் நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான சர்வதேச கடல்சார் எல்லையை அத்துமீறி 5 நாட்டிகல் மைல் உள்நுழைந்த பாகிஸ்தானிய படகை குஜராத் மாநிலம் ஜகாவ் பகுதியில் இருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில் இந்திய கடலோர காவல்படை மடக்கி நிறுத்த முயன்றது.

அப்போது அந்த பாகிஸ்தானிய படகு உடனடியாக இந்திய கடலோர காவல்படையிடம் இருந்து தப்பிக்க முயன்ற நிலையில் இரண்டு இந்திய கடலோர காவல்படை அதிவேக படகுகளும் பாகிஸ்தானிய படகை இடைமறித்து நிறுத்திய நிலையில் படகில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுமார் 50 கிலோ அளவிலான ஹெராயின் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது, இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர், இந்திய கடலோர காவல்படை இரவிலும் மோசமான கடலிலும் பயணித்து இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

பின்னர் ஜகாவ் நகரத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த பாகிஸ்தான் படகு மற்றும் அதில் இருந்தவர்களை மத்திய மாநில அமைப்புகள் விசாரிக்க உள்ளன, கடந்த செப்டம்பர் மாதமும் குஜராத் காவல்துறை மற்றும் இந்திய கடலோர கொண்டு காவல்படை இணைந்து சுமார் 40 கிலோ போதை பொருட்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.